மேலும்

சிறிலங்காவுக்கு ட்ரோன்களை வழங்கும் ஜப்பான்- இன்று கைச்சாத்திடப்படுகிறது உடன்பாடு

சிறிலங்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையில், பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு மற்றும் அபிவிருத்தி உதவி தொடர்பான பல உடன்பாடுகள் இன்று கைச்சாத்திடப்படும் என ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜப்பானுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க இன்று  டோக்கியோவில் ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் இருதரப்பு பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

இதன்போது, முதல்முறையாக ஜப்பானின் அதிகாரப்பூர்வ பாதுகாப்பு உதவித் (OSA) திட்டத்தில் சிறிலங்காவைச் சேர்த்துக் கொள்வது தொடர்பான உடன்பாடும் கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசியாவிற்குள் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, இந்த உதவித் திட்டத்தில், தெற்காசிய நாடு ஒன்று  சேர்த்துக் கொள்ளப்படுவது இதுவே முதல் முறையாகும்.

சிறிலங்காவில் கடல்சார் பாதுகாப்பை அதிகரிக்க, ஜப்பானில் தயாரிக்கப்பட்ட கண்காணிப்பு ட்ரோன்களை வழங்குவது, அதிகாரபூர்வ பாதுகாப்பு உதவித் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்று ஜப்பானிய ஊடகமான நிக்கேய் தெரிவித்துள்ளது.

இந்த ட்ரோன்களை செயற்படுத்துவதற்கு சிறிலங்கா படையினருக்கு  பயிற்சி அளிப்பதும் இந்த திட்டத்தின் கீழ் சேர்க்கப்படும்.

ஜப்பான் கடந்தவாரம் இதேபோன்ற திட்டத்தின் கீழ், மலேசியாவுக்கு இதுபோன்ற 14 உயர் தொழில்நுட்ப ட்ரோன்களை கொடையாக வழங்கியது.

இந்த ட்ரோன்கள் தேடல் மற்றும் மீட்பு மற்றும் புலனாய்வுத்துறை, கண்காணிப்பு மற்றும் வேவுபார்க்கும் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும்.

பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளும் ஜப்பானின்  அதிகாரபூர்வ பாதுகாப்பு உதவித் திட்டத்தின் பயனாளிகளாக உள்ளன.

அதேவேளை சிறிலங்கா அதிபருடனான உயர்மட்ட பேச்சுவார்த்தைகளின் போது முதலீடு மற்றும் வர்த்தகத்தை அதிகரிக்க ஜப்பான் ஒரு பொருளாதார வழித்தட திட்டத்தை முன்மொழிய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொருளாதார வழித்தடம், ஜப்பானைத் தவிர, ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கான சிறிலங்காவின் ஏற்றுமதியை அதிகரிக்கவும் உதவும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஜப்பானின் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) மூலம் ஜப்பானால் நிதியளிக்கப்படும் தடைப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் தொடங்குவது குறித்தும் இந்தச் சந்திப்பின் போது கவனம் செலுத்தப்படும்.

மேலும், ஜப்பானிய பிரதமருக்கும் சிறிலங்கா அதிபருக்கும் இடையிலான சந்திப்பின் நிகழ்ச்சி நிரலில், குறைந்த வட்டியுடனான ஜப்பானிய யென் கடன்கள் முக்கியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜப்பானிய நிறுவனங்களின் வெளிநாட்டு நேரடி முதலீடு குறித்தும் அவர்கள் கவனம் செலுத்துவார்கள் என்றும் ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *