மாகாணசபை தேர்தலுக்கு இந்தியா வலியுறுத்த வேண்டும்- சந்தோஷ் ஜாவிடம் கோரிக்கை
மாகாணசபைகளுக்கான தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கத்திற்கு இந்தியா உரிய அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவிடம் வலியுறுத்தியுள்ளனர்.
சிறிலங்காவுக்கான தூதுவர் சந்தோஷ் ஜாவை, தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், இராசமாணிக்கம் சாணக்கியன், மருத்துவர் சத்தியலிங்கம், துரைராசா ரவிகரன், சண்முகம் குகதாசன், மருத்துவர் சிறிநாத் ஆகியோர் நேற்று சந்தித்து இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என இந்தியப் பிரதிநிதி வலியுறுத்தியதற்கு அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
அத்துடன், சிறிலங்கா அரசாங்கம் மாகாண சபைகளுக்கான தேர்தலை தாமதப்படுத்துவதற்கே முனைந்து வருவதாகவும், எல்லை நிர்ணய அறிக்கையை காரணம் காட்டி, தேர்தலை பிற்போடுவதற்கு நடவடிக்கைகளையே முன்னெடுப்பதாகவும் அவர்கள் இந்தியத் தூதுவரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சிறிலங்கா அரசாங்கத்துக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை காணப்படுகின்ற நிலையில், பழைய முறையில் தேர்தலை நடத்துவதற்கான பிரேரணையை நிறைவேற்றுவதன் மூலமாக உடனடியாக தேர்தலை நடத்த முடியும் என்றும், ஆனால் அரசாங்கம் திட்டமிட்டு தாமதப்படுத்துவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு, இந்தியா 63மில்லியன் டொலர்களை ஒதுக்கீடு செய்துள்ள போதும் சிறிலங்கா அரசாங்கம அதனை வர்த்தக துறைமுகமாக அபிவிருத்தி செய்ய முடியாது என கூறியிருப்பது குறித்தும் தமிழ் அரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியத் தூதுவரிடம் எடுத்துக் கூறியுள்ளனர்.
இந்த விடயத்தில் அரசாங்கத்தின் எதிர்மறையான நிலைப்பாட்டைக் கண்டித்துள்ள அவர்கள், இது தொடர்பாக இந்தியா அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து கருத்து வெளியிட்ட, இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா, மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துமாறு தான் தொடர்ச்சியாக அரசாங்கத்தின் சகல மட்டங்களிடமும் கரிசனையை வெளிப்படுத்தியுள்ளதாகவும், இந்தியா அனைத்துலக அரங்கிலும் அந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தொடர்ச்சியாக அந்த விடயத்தை முன்னெத்துச் செல்வோம் என்றும் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துடன் உரையாடல்களை மேற்கொள்ளவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.