மேலும்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து ஜெனிவாவில் நாளை மறுநாள் மீளாய்வு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா. குழுவின், சிறிலங்கா குறித்த கால மீளாய்வு அமர்வு வரும் வெள்ளிக்கிழமை ஜெனிவாவில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 26ஆம் திகதி உள்ளூர் நேரப்படி காலை 10:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரையிலும், பிற்பகல் 3:00 மணி முதல் மாலை 6:00 மணி வரையிலும் – இரண்டு அமர்வுகளாக இந்த மீளாய்வு இடம்பெறும்.

ஐ.நா வலையொளியில் (UNTV) இது நேரடியாக ஒளிபரப்பப்படும்.

பொது உரையாடலின் போது, ​​சிறிலங்கா அரசாங்கம் தனது அறிக்கையை சமர்ப்பித்த பின்னர், பல்வேறு பிரச்சினைகள் குறித்து சிறிலங்கா பிரதிநிதிகளிடம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா. குழு கேள்வி எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தில் செய்யப்பட்ட 14,988 முறைப்பாடுகளை தீர்ப்பதில்,அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதில் இருந்து அல்லது வழக்குத்தொடுப்பதில் இருந்து விலக்குப் பெறுவதற்கு சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுக்கு சட்டப் பாதுகாப்புகள் உள்ளதா என்பன குறித்தும் கேள்வி எழுப்பப்படும்.

தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை, 2022 மார்சில் கொழும்பில் தொடங்கிய அரகலய போராட்டங்களின் போது, காணாமல் போனவர்கள் மற்றும் 1983 மற்றும் 2009 க்கு இடையில்  உள்நாட்டு மோதலுடன் தொடர்புடைய வழக்குகள் குறித்து முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்றும்  ஐ.நா குழு கேள்விகளை எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டாயமாக காணாமல் போவதிலிருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச பிரகடனத்துடன், சிறிலங்கா அரசு இணங்குவதைக் கண்காணிப்பதற்கான குழுவின் ஆணையின் ஒரு பகுதியாக, இந்த மீளாய்வு இடம்பெறுகிறது.

சிறிலங்கா குறித்த ஐ.நா குழுவின்  இறுதி அவதானிப்புகள் இந்த மீளாய்வுக்குப் பின்னர் வெளியிடப்படும்.

இந்த மீளாய்வு அமர்வில்  சிறிலங்கா அரசின் சார்பில், கலந்து கொள்வதற்காக, நீதி அமைச்சர், ஹர்ஷண நாணயக்கார, இன்று  ஜெனிவாவுக்குப் பயணமாகவுள்ளார்.

நீதி அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், காணாமல் போனவர்கள் தொடர்பான பணியகம்,  வெளிவிவகார அமைச்சு, மற்றும் ஜெனிவாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர பணியகம் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகளும், இந்த அமர்வில், பங்கேற்கவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *