காணிகள் விடுவிப்பு குறித்து வடக்கு ஆளுநரிடம் அமெரிக்க அதிகாரி கேள்வி
அமெரிக்க தூதரகத்தின் தலைமை அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரி, அந்தோனி பிர்நொட் (Anthony Pirnot) வடக்கு மாகாணத்திற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
பிராந்திய பிரச்சினைகள் குறித்து நேரடியாக அறிந்து கொள்வதற்காகவும், தொடர்புடைய பங்குதாரர்களைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்காகவும் அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது அவர் நேற்று வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில், வடக்கு மாகாண ஆளுநர் என். வேதநாயகனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, சிறிலங்கா இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்குப் பதிலளித்த வடக்கு மாகாண ஆளுநர், மக்களின் காணிகள் மக்களுக்கே என்ற அரசாங்கத்தின் கொள்கைப்படி, காணிகள் விடுவிப்பு படிப்படியாக இடம்பெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.