அனைத்துலக விசாரணையை வலியுறுத்தும் கையொப்பங்கள் ஐ.நாவிடம் கையளிப்பு
அனைத்துலக விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்தி, அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒன்றிணைந்து முன்னெடுத்த கையெழுத்துப் போராட்டத்தில் பெற்றுக் கொண்ட கையொப்பங்கள், சிறிலங்காவுக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி மார்க் அண்ட்ரே பிரான்சேயிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
நேற்று பிற்பகல் 3:30 மணியளவில் கொழும்பில் உள்ள ஐ.நா பணியகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது, இந்தக் கையொப்பங்களையும், தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து கையொப்பமிட்ட கடித வரைவும், ஐ.நா பிரதிநிதியிடம் கையளிக்கப்பட்டன.
தமிழ் தேசிய கட்சிகளின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், சமத்துவ கட்சியின் செயலாளர் சந்திரகுமார், கட்சிகளின் ஒருங்கிணைப்பாளரான குருசாமி சுரேந்திரன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு எழுதப்பட்டு, ஐ.நா பொதுச்செயலருக்கும், ஐ.நா பாதுகாப்பு சபைக்கும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் பிரதியிடப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில், நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன், செ. கஜேந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், முருகேசு சந்திரகுமார் மற்றும் எஸ். நவீந்திரா (வேந்தன்) ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.