எதனை எதிர்பார்க்கிறது இந்தியா?
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், கடந்த 8ஆம் திகதி உரையாற்றிய இந்தியப் பிரதிநிதி அனுபமா சிங், மாகாண சபைகளுக்கு விரைவாகத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை உறுதி செய்ய வேண்டும் என்றும், அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியிருந்தார்.
கடந்த 11 ஆண்டுகளாக எந்தவொரு மாகாண சபைக்கும் தேர்தல் நடத்தப்படாத நிலையில், கிட்டத்தட்ட மாகாண சபை கட்டமைப்பை ஒரு வெள்ளை யானையாக- பயனற்ற ஒன்றாக, மக்கள் மத்தியில் கொண்டு செல்வதில், ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் கணிசமாக முன்னேறியிருக்கின்றன.
தற்போதைய அரசாங்கத்துக்கும் கூட, மாகாண சபைத் தேர்தல்களை நடத்தும் நோக்கம் இல்லை. அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.
ஒன்று- 13 ஆவது திருத்தச் சட்டத்தையும், மாகாண சபைக் கட்டமைப்பையும், தற்போதைய அரசாங்கத்தின் தாய்க்கட்சியான ஜேவிபி ஏற்றுக் கொள்ளவில்லை.அதற்கு எதிராக தனது இரண்டாவது ஆயுதக் கிளர்ச்சியை நடத்திய கட்சி அது.
இரண்டு- இப்போதைய அரசாங்கத்தின் செல்வாக்கை மீண்டும் ஒரு முறை உரசிப் பார்க்கும் முயற்சியை அது விரும்பவில்லை. உள்ளூராட்சித் தேர்தலில் அரசாங்கத்தின் செல்வாக்கு குறையத் தொடங்கி விட்டது தெளிவாகத் தெரிந்த நிலையில், மாகாண சபைத் தேர்தலின் மூலம் அதனை நிரூபிப்பது, ஆட்சியில் உள்ள அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையையும், பலத்தையும் குறைத்து விடும் என்ற அச்சம் அதற்கு இருக்கிறது.
எனவே தற்போதைய அரசாங்கமும் மாகாண சபைத் தேர்தல்களை பிற்போடுவதிலேயே கவனம் செலுத்துகிறது.
இந்தநிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஜெனிவாவில் இந்தியா, மாகாண சபைத் தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு வலியுறுத்தியதைப் போலவே, இந்தமுறையும் வலியுறுத்தியிருக்கிறது.
அதற்கு அப்பால் இந்தியா என்ன செய்யப் போகிறது என்பது தான் கேள்வி.
மாகாண சபைக் கட்டமைப்பை வெள்ளை யானை திட்டமாக அடையாளப்படுத்தி, அதனை இல்லாமல் செய்யும் உயர்மட்டச் சூழ்ச்சி கொழும்பில் முன்னெடுக்கப்படுவதை இந்தியா உணராமல் இருக்க முடியாது.
2015இல் மகிந்த ராஜபக்சவின் தோல்வியை, 2019இல் கோட்டாபய ராஜபக்சவின் வெற்றியை, 2024இல் அனுரகுமார திசாநாயக்கவின் வெற்றியை, மாத்திரமன்றி, 2019 இல் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலையும் கூட முன்கூட்டியே கணித்திருந்த, அறிந்திருந்த இந்தியாவுக்கு, மாகாண சபைகள் படிப்படியாகத் திட்டமிட்டுச் சாகடிக்கப்பட்டுக் கொண்டிருப்பது தெரியாமல் இருந்தால் அது ஆச்சரியம்.
அதைவிட, இந்த கட்டமைப்பு திட்டமிட்டு சீர்குலைக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்ற எண்ணம், இந்தியாவுக்கு இருக்கிறதா என்பது சந்தேகம்.
ஏனென்றால், இப்போதைய ஆளும்கட்சி, 2006ஆம் ஆண்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களை உயர்நீதிமன்றத்தை நாடி பிரித்த பின்னர், அதனை மீளவும் ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளை இந்தியா எடுக்கவேயில்லை.
அதனை ஒருபோதும் இந்தியா கோரவில்லை என்று மகிந்த ராஜபக்ச முன்னர் கூறியிருந்தார்.
கடந்த வாரம் தமிழ் ஊடகங்களின் பிரதானிகளைச் சந்தித்த போது, ஒருங்கிணைந்த வட-கிழக்கு மாகாணத்தில், தமிழ் பேசும் மக்களுக்கான முழுமையான பிராந்திய நிர்வாகம் நிலவ வேண்டும் என்பதில் இந்தியா ஆர்வமாக இருக்கிறது என்று இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா குறிப்பிட்டிருக்கிறார்.
அப்படியானால், இதனை நடைமுறைப்படுத்துவதற்கு அல்லது சாத்தியப்படுத்துவதற்கு இந்தியா என்ன செய்திருக்கிறது?
1987ஆம் ஆண்டு இலங்கை தமிழர் பிரச்சினையில் தலையீடு செய்த இந்தியா, -தமிழ் மக்களின் விருப்பங்கள், அபிலாசைகள் என்ன என்பதை கேட்டறிந்து கொள்ளாமலேயே, தன்னிச்சையாக 13ஆவது திருத்தம், மாகாண சபைகள் போன்றவற்றை தீர்வாக திணித்தது.
அதனை விடுதலைப் புலிகள் மாத்திரம் நிராகரிக்கவில்லை. அப்போது மிகப்பெரிய தமிழ் மிதவாதக் கட்சியாக இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கமும் கூட, மாகாண சபைகளை தீர்வாக ஏற்றுக் கொள்ள முடியாதென அறிவித்திருந்தார்.
அதுமாத்திரமன்றி, முதலாவது வட-கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட ஈபிஆர்எல்எவ் கூட, மாகாண சபைகளை தமிழர் பிரச்சினைக்கான இறுதித் தீர்வாக ஏற்றுக் கொள்ள முடியாதென்றே கூறியது.
ஆக, தமிழர் பிரச்சினைக்கு 13 ஆவது திருத்தமோ, மாகாண சபைகளோ இறுதியான தீர்வல்ல. இது அனைத்து தமிழ்க் கட்சிகளினதும் அன்றைய நிலைப்பாடு மாத்திரமல்ல, இன்றைய நிலைப்பாடாகவும் உள்ளது.
ஏனென்றால் அதற்கு அப்பாற்பட்ட மீளப் பெறப்பட முடியாத அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்ட ஒரு சமஷ்டித் தீர்வையே, தமிழர்கள் எதிர்பார்த்தனர், எதிர்பார்க்கின்றனர்.
இதுவும் இந்தியாவுக்குத் தெரியும். இதனை பலமுறை தமிழ்த் தலைவர்கள் இந்தியாவுக்கு எடுத்துக் கூறியும் விட்டனர்.
ஆனாலும், 1987ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தியாவில் ஆட்சியில் இருந்த ஒவ்வொரு அரசாங்கமும், தமிழர் பிரச்சினைக்கான இறுதித் தீர்வாகவே, 13 ஆவது திருத்தச் சட்டத்தையும், மாகாண சபைகளையும் அறிவித்து வந்தன.
அதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசாங்கமும் விதிவிலக்கல்ல. அதனைப் பலமுறை இந்திய தலைவர்கள், அமைச்சர்கள், இராஜதந்திரிகள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
அதுமாத்திரமன்றி, தமிழ்மக்களின் அபிலாஷைகளான சமத்துவம், நீதி மற்றும் கௌரவமான அரசியல் தீர்வை அடைவதற்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும் என, இந்தியப் பிரதமர் மோடி பலமுறை உறுதியாக கூறியிருக்கிறார்.
அப்படியானால், இந்தியா தமிழர்களுக்கான தீர்வு என சுட்டிக்காட்டும் 13 ஆவது திருத்தச்சட்டம் பலவீனப்படுத்தப்படும் போதும்- மாகாண சபைகள் செயலற்றதாக்கப்படும் போதும், பாராமுகமாக இருந்திருக்க முடியாது.
உரிய நேரத்தில் தலையிட்டிருக்கும். ஏனென்றால் அது இந்தியாவின் கடப்பாடு.
தமிழர்களின் சமத்துவம், நீதி, கௌரவமான வாழ்வு என்பனவற்றை உறுதி செய்யும் கடப்பாடு தமக்கு இருப்பதாக கூறிக் கொண்டது இந்தியா தான்.
அப்படியானால் அந்தக் கடப்பாட்டை இந்தியா நிறைவேற்றியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்திருக்கவில்லை. அல்லது இந்தியா அவ்வாறு வலியுறுத்தியதை இலங்கை செவிமடுக்கவில்லை.
மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு ஒவ்வொரு முறையும் சிறிலங்கா தலைவர்களைச் சந்திக்கும் போதும் கூறுகிறோம், அவர்களும் மறுப்புக்கூறாமல் தலையாட்டி விட்டுச் செல்கிறார்கள், ஆனால் ஒன்றும் நடப்பதாக இல்லை என, இந்தியத் தூதுவர் ஒருமுறை யாழ்ப்பாணத்தில் கூறியிருந்தார்.
நிலைமை அப்படியிருக்க, இப்போது இந்தியத் தூதுவர் தமிழ்க் கட்சிகள் ஒன்றாக நிற்கவில்லை, அதனால் தான், இந்தியாவினால் மாகாண சபைகள் தொடர்பாக இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க முடியவில்லை என்பது போல கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
தமிழ்க் கட்சிகள் ஒன்றாக- எழுத்து மூலம் கோரினால், இந்தியாவினால் காத்திரமான நடவடிக்கையை எடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
மாகாண சபைகள் விடயத்தில், தமிழ்க் கட்சிகள் மத்தியில் மாற்றுக் கருத்துக்கள் உள்ளன என்பது உண்மை.
அது மாகாண சபைகளை தீர்வாக ஏற்றுக் கொள்வதில் உள்ளதே தவிர, மாகாண சபைகளை இயங்கச் செய்வது தொடர்பான விடயம் அல்ல.
குறிப்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, 13 ஆவது திருத்தச் சட்டம், மாகாண சபைகளை இறுதித் தீர்வாக ஏற்றுக் கொள்ளவில்லை. அதனையே இந்தியத் தூதுவர் குறிப்பாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் மாகாண சபைகளுக்குத் தேர்தல் நடத்தப்பட்டால் அதில் பங்கேற்போம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னர் கூறியிருந்தது.
அவ்வாறான நிலையில், அந்தக் கட்சி, மாகாண சபைகளை வெறுப்பதாக அல்லது அது செயற்படக் கூடாதென எதிர்ப்பதாக அர்த்தம் இல்லை.
இந்தியத் தூதுவர் இந்த விடயத்தில் தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட்டு இந்தியாவிடம் கோரிக்கை வைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்.
இந்தியாவில் நீண்ட காலமாக வாழ்ந்து வருபவரும், இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் ஒரே முதல்வருமான வரதராஜப்பெருமாள் சில வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்து சில சந்திப்புகளை நடத்தினார்.
அதன் பின்னர், ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டவர்களால், வவுனியாவில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தக் கோரும் வகையிலான ஒரு கூட்டமும் நடத்தப்பட்டது.
அது மாத்திரமன்றி மாகாண சபைத் தேர்தல்களை வலியுறுத்தும் உரையாடல்களும், நிகழ்வுகளும்கூட இடம்பெற்றிருக்கின்றன.
இவற்றின் மூலம் மாகாண சபைகளை மீளவும் இயங்க வைக்கலாம் என்ற நம்பிக்கை சிலரிடம் இருக்கிறது. இதற்குப் பின்னால் இந்தியா இருக்கிறது என்ற நம்பிக்கையும் பரவலாக உள்ளது.
இலங்கை அரசிடம் இந்தியா தனது நிலைப்பாட்டைப் பகிரங்கமாக கூற முடியும். ஏனென்றால் தமிழர்களின் சார்பில் 1987 இந்திய- சிறிலங்கா அமைதி உடன்பாட்டில் கையெழுத்திட்டது இந்தியா தான். தமிழர்களுக்கு இது தான் தீர்வு என்றும் இந்தியா தான்குறிப்பிட்டது.
அப்படியிருக்க இப்போது, மாகாண சபைகள் தொடர்பாக தமிழ்க் கட்சிகள் ஒன்றாக இணைந்து கோர வேண்டும் என இந்தியா எதிர்பார்ப்பது ஏன் என்று புரியவில்லை.
மாகாணசபைகளை நிரந்தர தீர்வாக தமிழர்கள் தான் கோரினார்கள் என்று அடையாளப்படுத்த இந்தியா முற்படுகிறதா?
அவ்வாறான ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டால், தமிழர்களின் உண்மையான அபிலாசைகளை அது குழிதோண்டிப் புதைத்து விடாதா? அதனைத் தான் இந்தியா எதிர்பார்க்கிறதா?
-ஹரிகரன்
வழிமூலம் – வீரகேசரி வாரவெளியீடு (21.09.2025)