சிறிலங்காவின் எரிசக்தித் துறையில் நுழையும் அமெரிக்கா
அமெரிக்க வர்த்தக பிரதிநிதி பணியக அதிகாரிகள் கடந்த வாரம், சிறிலங்காவுக்கு வந்து அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்தனர்.அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சிறிலங்கா மீது விதித்த வரிகள் தொடர்பாக எட்டப்பட்ட ஒப்பந்தம் குறித்து, கலந்துரையாடுவதற்காக அவர்கள் வந்திருந்தனர்.
சிறிலங்கா மீது விதிக்கப்பட்ட வரிகளை ட்ரம்ப் கணிசமாகக் குறைத்தார். அதற்கு ஈடாக, சிறிலங்காவிடமிருந்து ட்ரம்ப் எதனை எதிர்பார்த்தார் என்பது தொடர்பாக, சிறிலங்காவின் வாக்குறுதிகள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
அதுபற்றி கலந்துரையாடுவதற்காகவே, அமெரிக்க வர்த்தக பிரதிநிதி பணியக அதிகாரிகள், சிறிலங்கா அதிபர் அனுரகுமாரவை சந்தித்திருக்கலாம்.
அந்த வர்த்தக பிரதிநிதிகள், சிறிலங்காவுக்கு வந்த பின்னர், அமெரிக்காவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்கு முன்னர் நடத்தப்பட்ட சோதனைகள் வெற்றிகரமாக இருந்ததாக சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கூறினார்.
அதன்படி, அடுத்த மாதம் முதல் அமெரிக்காவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான கேள்விப்பத்திரங்கள் கோரப்படும் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ட்ரம்ப் வழங்கிய வரிக் குறைப்புகளைப் பெறுவதற்காக, அமெரிக்காவிலிருந்து எண்ணெய் வாங்க சிறிலங்கா ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்க வர்த்தக பிரதிநிதி பணியக அதிகாரிகள் அந்த உறுதிமொழியை செயற்படுத்துவதற்காக வந்திருக்கலாம்.
அதனால் தான், அவர்களின் வருகைக்குப் பின்னர், அமெரிக்காவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது குறித்து பெட்ரோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் அறிக்கை வெளியிட்டிருக்கலாம்.
அமெரிக்கா, தமது நாட்டு எண்ணெயை சிறிலங்காவுக்கு விற்பனை செய்வது மட்டுமல்லாமல், நாட்டில் எரிசக்தி திட்டங்களுக்கான பல திட்டங்களையும் சமர்ப்பித்துள்ளது.
அவற்றில், கெரவலப்பிட்டிய மற்றும் சபுகஸ்கந்த ஆகியவை முக்கியமானவை.
2014 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில், அமெரிக்காவில் உள்ள வென்டெக் இன்ஜினியரிங் (Ventech Engineering) என்ற அரபு எமிரேட்ஸ் கூட்டு நிறுவனம், சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை விரிவுபடுத்துவதற்கான திட்டத்தை சமர்ப்பித்தது.
சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகள் இதை ஒரு பெரிய சாதனையாக அறிவித்தனர்.
ஆனால் 2015ஆம் ஆண்டு, மகிந்த ராஜபக்சவின் தோல்விக்குப் பின்னர், அந்த திட்டம் கைவிடப்பட்டது.
பின்னர் 2019 ஆம் ஆண்டு, மைத்திரி-ரணில் கூட்டு அரசாங்கத்தின் காலத்தில், சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டம், சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தை வடிவமைப்பதில் ஆரம்பத்தில் ஈடுபட்டிருந்த ஹனிவெல் யுஓபி (Honeywell UOP ) என்ற அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இருப்பினும், மைத்ரி-ரணில் அரசாங்கம் வீழ்ச்சிகண்ட பின்னர் அந்த திட்டமும் நிறுத்தப்பட்டது.
அதன் பின்னர், கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில், கெரவலப்பிட்டிய யுகதனவி மின் நிலையத்தின் ஒரு பகுதியை அமெரிக்க நிறுவனமான நியூ போர்ட்ரஸ் எனர்ஜிக்கு (New Fortress Energy) குத்தகைக்கு விட உடன்பாடு கையெழுத்திடப்பட்டது.
ஆனால் அரசாங்கத்திற்குள் இருந்த அமைச்சர்களின் எதிர்ப்பு காரணமாக, அந்த உடன்பாடு பின்னர் ரத்து செய்யப்பட்டது.
இப்போது மீண்டும், கெரவலப்பிட்டியவை அபிவிருத்தி செய்வதற்கான புதிய திட்டத்தை அமெரிக்கா சமர்ப்பித்துள்ளது.
சிறிலங்காவின் எரிசக்தி திட்டங்களில் முக்கிய பங்குதாரர்களாக சீனாவும் இந்தியாவும், விளங்குகின்றன.
இந்த நிலையில், ட்ரம்பின் வரிக் கொள்கை மூலம், சிறிலங்காவின் எரிசக்தித் துறையில் அமெரிக்கா நுழைவதை இந்த நாடுகள் எவ்வாறு பார்க்கப் போகின்றன என்பது நிச்சயமற்றதாக உள்ளது.
ஆங்கில மூலம் – உபுல் ஜோசப் பெர்னான்டோ