மேலும்

நான்கில் ஒரு பங்கு நிதியை விழுங்கும் சிறிலங்கா அதிபரின் அமைச்சுக்கள்

2026ஆம் ஆண்டுக்கான சிறிலங்காவின் வரவுசெலவுத் திட்டத்தில், அதிபர் அனுரகுமார திசாநாயக்கவின் கட்டுப்பாட்டில் உள்ள அமைச்சுக்களுக்கு நான்கில் ஒரு பகுதி நிதி ஒதுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திற்கு முன்னோடியாக, 2026ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அரசிதழில் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதற்கமைய நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கான, நிதி ஒதுக்கீடுகள் 1,000 பில்லியனைத் தாண்டும் எனத் தெரிகிறது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சுக்கு 634 பில்லியன் ரூபாவும்,  பாதுகாப்பு அமைச்சுக்கு  455 பில்லியன்   ரூபாவும் செலவு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் சிறிலங்கா அதிபரின் கீழ் உள்ள டிஜிட்டல் பொருளாதார அமைச்சுக்கு,16 பில்லியன் ரூபாவும்,  அதிபர் செயலகத்திற்கு 11 பில்லியன் ரூபாவும் தேவைப்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு 596 பில்லியன் ரூபாவும்,  சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்கு 555 பில்லியன் ரூபாவும், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சுக்கு  446 பில்லியன் ரூபாவும்  செலவு ஏற்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கு 300 பில்லியன் ரூபா செலவு ஏற்படும் என மதிப்பிடப்பட்டள்ளது.

2026 ஆம் ஆண்டிற்கான மொத்த அரசாங்க செலவுகள், 4,545.64 பில்லியன் ரூபா என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் எதிர்வரும்  26 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

2026 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பான, வரவுசெலவுத் திட்ட உரை, நொவம்பர் 7 ஆம் திகதி நடைபெறும்.

அதைத் தொடர்ந்து நொவம்பர் 8 முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை வரவுசெலவுத் திட்ட விவாதம் நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *