2027 வரை சிறிலங்காவை கண்காணிக்க கோருகிறது புதிய தீர்மான வரைவு
சிறிலங்காவை மேலும் இரண்டு ஆண்டுகள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் கண்காணிப்பில் வைத்திருக்க கோரும் புதிய தீர்மான வரைவு ஒன்றை அனுசரணை நாடுகள் தயாரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனடா, மலாவி, மொண்டினீக்ரோ, வடக்கு மசிடோனியா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய, சிறிங்கா அனுசரணை நாடுகளின் குழு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில், புதிய தீர்மான வரைவு ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளன.
நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் சிறிலங்கா உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இந்த தீர்மான வரைவு வலியுறுத்துகிறது.
“சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்” என்ற தலைப்பிலான இந்தத் தீர்மான வரையில், முந்தைய ஐ.நா மனித உரிமைகள் பேரவை நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது.
அத்துடன், தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைகளான மனித உரிமை மீறல்கள், நிர்வாகத் தோல்விகள் மற்றும் நாட்டில் உள்ளடக்கிய ஜனநாயக சீர்திருத்தத்திற்கான தேவை குறித்த வளர்ந்து வரும் சர்வதேச கவலையை பிரதிபலிக்கிறது.
இந்தத் தீர்மான வரைவு, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் அதிபர், நாடாளுமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தியதை ஒப்புக்கொள்கிறது.
அதே நேரத்தில் சிறிலங்காவின் அரசியலமைப்பின் 13வது திருத்தத்திற்கு இணங்க அரசியல் அதிகாரத்தை மேலும் பரவலாக்க வலியுறுத்துகிறது.
பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளை இது வரவேற்கிறது.
ஆனால், ஊழல், இராணுவமயமாக்கல், தண்டனையின்மை மற்றும் பொறுப்புக்கூறல் இல்லாமை போன்ற மூல காரணங்களைச் சமாளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட அனைத்து தரப்பினரும் செய்த மீறல்களுக்கு விரிவான பொறுப்புக்கூறல் செயல்முறையை உருவாக்க இந்த தீர்மான வரைவு கோருகிறது,
மேலும், குறிப்பிட்ட வழக்குகள் மற்றும் ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளில் விசாரணைகளை வலியுறுத்துகிறது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்வதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டையும், அதை ரத்து செய்வதை ஆராய ஒரு குழுவை நியமிப்பதையும் இது கவனத்தில் கொண்டுள்ள, அதே நேரத்தில் அந்தச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவல்கள் தொடர்கின்றன என்ற கவலையை வெளிப்படுத்துகிறது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கவும், அதை ரத்து செய்வதை விரைவுபடுத்தவும், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது குறித்த எந்தவொரு சட்டமும் சர்வதேச சட்டத்திலிருந்து எழும் அரசின் கடமைகளுக்கு முழுமையாக இணங்குவதை உறுதி செய்யவும் அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.
சட்டத்தில் நீதித்துறை மேற்பார்வை மற்றும் குற்றங்கள் மற்றும் நடைமுறைப்படுத்தும் அதிகாரங்கள் பற்றிய பரந்த வரையறை இல்லாதது குறித்த கவலைகளை வெளிப்படுத்துகிறது.
நிகழ்நிலை காப்பு சட்டத்தைத் திருத்துவதற்கும், சட்டத்தில் திருத்தங்களை உருவாக்குவதற்கான ஒரு குழுவை நியமிப்பதற்கும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வரவேற்கிறது.
மேலும் கருத்து மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையைப் பாதுகாப்பதற்கான அரசின் சர்வதேச கடப்பாடுகளுடன் சட்டம் முழுமையாக இணங்குவதை உறுதிசெய்ய அதன் திருத்தத்தை விரைவுபடுத்த அரசாங்கத்தை ஊக்குவிக்கிறது.
தீர்க்கப்படாத விடயங்களாக உள்ள காணாமல்போனோர் வழக்குகள், மனிதப் புதைகுழிகள் போன்றவற்றுக்கும், காணாமல் போனோர் அலுவலகத்தை வலுப்படுத்தவுமம் சர்வதேச ஆதரவு தேவை என்பதை இந்தத் தீர்மான வரைவு வலியுறுத்துகிறது.
ஊடகவியலாளர்கள், மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், குறிப்பாக பெண்கள் மீதான துன்புறுத்தல் மற்றும் பழிவாங்கல்களை முடிவுக்குக் கொண்டுவர இது அழைப்பு விடுக்கிறது.
சிறிலங்கா இராணுவத்தால் இன்னும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை விடுவிக்கவும், மத மற்றும் தொல்பொருள் உரிமைகோரல்கள் சம்பந்தப்பட்ட நிலப் பிரச்சினைகளுக்கு வெளிப்படையான தீர்வு காணவும் இந்தத் தீர்மான வரைவு வலியுறுத்துகிறது.
சிறிலங்காவின் முன்னேற்றத்தைத் தொடர்ந்து கண்காணித்து அறிக்கையிட ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் ஆணையை நீடிக்க இந்தத் தீர்மான வரைவு கோருகிறது.
அதற்கமைய, எதிர்கால ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் வாய்மொழி மற்றும் எழுத்துப்பூர்வ புதுப்பிப்புகளை கோருவதுடன், பேரவையின் 66வது அமர்வில் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.