மேலும்

சிறிலங்கா எந்தவொரு உள்நாட்டுப் பொறிமுறையையும் முன்மொழியவில்லை

சிறிலங்கா அரசாங்கம் போர்க்கால மீறல்கள் தொடர்பாக உள்ளக விசாரணை மட்டுமே நடத்தப்படும் என அறிவித்திருந்தாலும், எந்தவொரு நம்பகமான உள்நாட்டுப் பொறிமுறையையும் முன்மொழியவில்லை என அனைத்துலக ஊடகமான ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், நேற்று சிறிலங்கா குறித்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை மற்றும் அதற்கான சிறிலங்காவின் பதில் என்பனவற்றுக்கு அனைத்துலக ஊடகங்களில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஏஎவ்பி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில்,

சிறிலங்காவின்  புதிய அரசாங்கம், 100,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட,  இன மோதலின் போது நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து அனைத்துலக விசாரணை நடத்த வேண்டும் என்ற ஐ.நாவின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.

எதிர்கால வழக்குத் தொடரலுக்கான ஆதாரங்களைப் பாதுகாக்கும் ஐ.நா.வின் பொறுப்புக்கூறல் திட்டத்தை தனது அரசாங்கம் எதிர்ப்பதாக, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்  ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்தார்.

ஓராண்டுக்கு முன்னர் ஆட்சிக்கு வந்த அதிபர் அனுர குமார திசாநாயக்கவின் இடதுசாரி அரசாங்கம், இன நல்லிணக்கத்திற்கும் நீதித்துறை சுதந்திரத்தை நிலைநிறுத்துவதற்கும் உறுதிபூண்டுள்ளது என்று அவர் கூறினார்.

2009 மே மாதம் முடிவடைந்த போரின் இறுதி மாதங்களில் சிறிலங்கா பாதுகாப்புப் படையினர் குறைந்தது 40,000 சிறுபான்மை தமிழ் பொதுமக்களைக் கொன்றதாக எழுந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை கொழும்பின்  அடுத்தடுத்த அரசாங்கங்கள் எதிர்த்தன.

புதிய அரசாங்கத்தின் கீழ் ஏற்பட்ட முன்னேற்றத்தைக் கவனிக்குமாறும், அனைத்து சமூகங்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்கான  அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை அங்கீகரிக்குமாறும் விஜித ஹேரத் பேரவையை வலியுறுத்தினார்.

சிறிலங்காவில் நடைபெற்று வரும் தேசிய நல்லிணக்க செயல்முறையை பிளவுபடுத்தவும் சிக்கலாக்கவும் உதவும் சிறிலங்கா பொறுப்புக்கூறல் திட்டம் போன்ற எந்தவொரு வெளிப்புற பொறிமுறையையும் அரசாங்கம் எதிர்க்கிறது என்று அவர் கூறினார்.

எனினும், எந்தவொரு புதிய தேசிய பொறுப்புக்கூறல் முயற்சியையும் அவர் விரிவாகக் கூறவில்லை.

ஐ.நா. உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க், போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக நம்பத்தகுந்த நபர்களுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்க வேண்டும் என்றும், சிறிலங்கா குற்றவாளிகள் மீது ஏனைய அரசாங்கங்கள் வழக்குத் தொடரவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சிறிலங்காவின் எதிர்ப்பையும் மீறி பொறுப்புக்கூறல் திட்டத்தை ஆதரிக்குமாறு அவர் பேரவை உறுப்பினர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

“உலகளாவிய அதிகார வரம்பின் கீழ், சிறிலங்காவில் செய்யப்பட்ட அனைத்துலக குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றவாளிகளை விசாரித்து வழக்குத்தொடுப்பதில் ஒத்துழைக்குமாறு நான் அவர்களை (பிற உறுப்பு நாடுகளையும்) கேட்டுக்கொள்கிறேன், என்று அவர் குறிப்பிட்டார்.

16 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையை நசுக்கியதன் மூலம், அனைத்துத் தரப்பிலும் குறைந்தது 100,000 உயிர்களைக் கொன்ற 37 ஆண்டுகால மோதல் முடிவுக்கு வந்தது.

சிறிலங்கா அரசாங்கங்கள், அதன் சொந்தப் படைகள் அல்லது அதன் எதிரியான தமிழ்ப் புலிகளால் செய்யப்பட்டதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து சுயாதீன விசாரணையை அனுமதிக்க தொடர்ந்து மறுத்து வருகின்றன.

குற்றச்சாட்டுகளை விசாரிக்க எந்தவொரு நம்பகமான உள்நாட்டு பொறிமுறையையும் அவர்கள் முன்மொழியவில்லை, என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *