வன்முறைகள் தலைவிரித்தாடும் நேபாளத்தில் இலங்கையர்கள் பத்திரம்
நேபாளத்தில் நிலவும் வன்முறைகளினால், இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் உள்ள சிறிலங்கா சமூகத்தினரிடம் அவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு குறித்து பேசியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேபாளத்தில் 22 சிறிலங்கா மாணவர்கள் உள்ளனர், தூதரக ஊழியர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் உட்பட மொத்தம் 99 இலங்கையர்கள் உள்ளனர்.
அவர்களில் யாரும் பாதிக்கப்படவில்லை என்பதை அறிந்து நான் நிம்மதியடைந்தேன்.
காத்மண்டுவில் உள்ள சிறிலங்கா தூதரகம், வாட்ஸ்அப் குழுக்களை நிறுவி, குடிமக்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேண அவசர தொடர்பு இலக்கங்களை விநியோகித்துள்ளது.
இலங்கையர்கள் வீட்டிற்குள் இருக்கவும், போராட்டத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தவிர்க்கவும், ஊரடங்கு உத்தரவுகளை கண்டிப்பாகப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேவைப்பட்டால், வெளியேற்றம் உட்பட, மேலும் உதவிகளை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது என்று எங்கள் குடிமக்களுக்கு நான் உறுதியளித்தேன்.
வெளிவிவகார அமைச்சு தொடர்ந்து முன்னேற்றங்களைக் கண்காணித்து, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.
நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை அடுத்து, அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் அடைந்தன.
இதையடுத்து நேற்று நேபாள பிரதமர் சர்மா ஒலி பதவி விலகிய போதும் வன்முறைகள் கட்டுக்கடங்காமல் தொடர்கின்றனர்.
நாடாளுமன்றம், பிரதமர் மாளிகை , உயர்நீதிமன்றம், நட்சத்திர விடுதி உள்ளிட்ட அரச கட்டடங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
முன்னாள் பிரதமரின் மனைவி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டுள்ளார். நிதியமைச்சர் வீதியில் துரத்தித் துரத்தி தாக்கப்பட்டுள்ளார்.
இராணுவம் அமைதியாக இருக்குமாறு கோரியுள்ளதுடன் அமைச்சர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
விமான நிலையம் மூடப்பட்டு சர்வதேச தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.