ஐ.நாவின் பரிந்துரையை நிராகரித்தது சிறிலங்கா
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் அண்மைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சர்வதேச தலையீடுகளுக்கான கோரிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.
இதுதொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், அனைத்து மக்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை வலுப்படுத்தும் சீர்திருத்தங்களை செயற்படுத்த, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக் கொள்வதாக கூறியுள்ளது.
இருப்பினும், அத்தகைய முன்னேற்றத்திற்கு வெளியகத் தலையீடுகள் அவசியமில்லை என்பதுடன், போதுமான இடமும் நேரமும் தேவை என்றும் சிறிலங்கா அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
வெளிப்புற தலையீடுகள், தொடர்ச்சியான உள்நாட்டு முயற்சிகளுக்கு தடையாக இருக்கும் என்றும், மக்களை துருவமுனைப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்தும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது,
சர்வதேச நடவடிக்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையின் முடிவுகள் மற்றும் பரிந்துரைகளுடன் அரசாங்கம் உடன்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
