ரோம் சட்டத்தில் கையெழுத்திடுமாறு அழைப்பு – பதறும் போர்க்குற்றவாளிகள்
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை அங்கீகரிக்கும் ரோம் சட்டத்தில் கையெழுத்திடுமாறு, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் விடுத்துள்ள அழைப்பு தொடர்பான நிலைப்பாட்டை, நாடாளுமன்றத்தில் உள்ள அரசியல் கட்சிகள் வெளிப்படுத்த வேண்டும் என, முன்னாள் கடற்படைப் பேச்சாளர் றியர் அட்மிரல் டிகேபி தசநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
“வரும் திங்கட்கிழமைதொடங்கவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் அதிகாரப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட உள்ள அறிக்கையின், சர்ச்சைக்குரிய விடயங்களில் இதுவும் ஒன்றாகும்.
சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலைமை என்ற தலைப்பிலான ஐ.நா அறிக்கையின் முன்கூட்டிய பிரதி, அரசியல் கட்சிகளுக்குக் கிடைத்தாலும், யாரும் கருத்து தெரிவிக்கவில்லை.
ஜெனிவாவில், மேற்கத்திய நிகழ்ச்சி நிரல் செயற்படுத்தப்படும் போது அனைவரும் அமைதியாக இருக்கின்றனர்.
இந்த முன்கூட்டிய அறிக்கை இரண்டு வாரங்களுக்கும் மேலாக பொது அரங்கில் இருந்தது.
ஆனால் அரசாங்கமும் எதிர்க்கட்சியும் அமைதியாக இருந்தன.
உருவாகி வரும் நிலைமை குறித்து நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம்.
இந்த விடயத்தில், ஒத்த எண்ணம் கொண்ட முன்னாள் படை அதிகாரிகள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் கொழும்புக்கு வந்தபோது அவரைச் சந்திக்க முயன்றோம், ஆனால் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஐ.நாவின் அழைப்பு ஒன்றும் புதிதல்ல.
அவர்கள் நீண்ட காலமாக சிறிலங்கா மீது அழுத்தம் கொடுத்து வந்தனர். ஆனால் முந்தைய அரசாங்கங்கள், கடுமையான அழுத்தங்கள் இருந்தபோதிலும், அடிபணியவில்லை.
அரசியல் கட்சிகள் ஐ.நாவுடன் ஒத்துழைப்பதால்,சிறிலங்காவுக்கு விரோதமான நிகழ்ச்சி நிரலை ஐ.நாவினால் முன்னெடுக்க முடிகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வைஸ் அட்மிரல் டிகேபி.தசநாயக்க, போர்க்காலத்தில் இடம்பெற்ற ஆட்கடத்தல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருப்பவர் ஆவார்.
2021 இல் கடற்படையில் இருந்து ஓய்வுபெற்ற அவர், போரின் போது, கடல்சார் சிறப்புப் படைகளின் பணிப்பாளராகவும், கடற்படை நடவடிக்கைகளின் பிரதி பணிப்பாளராகவும், பணியாற்றியிருந்தார்.
போரின் கடைசி கட்டத்தில், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தப்பிச் செல்வதை தடுக்கும் நோக்கில் முல்லைத்தீவுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கடற்படை முற்றுகைக்கு அவர் தலைமை தாங்கியிருந்தார்.
கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபரான இவர், கைது செய்யப்பட்டு விளக்கமறியலிலும் வைக்கப்பட்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
