மேலும்

வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் காலஅவகாசம் கோரினார் விஜித ஹேரத்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சிறிலங்காவுக்கு மேலும் காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும் என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.

மனித உரிமைகள் விடயங்களில் சிறிலங்கா அரசாங்கம் அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து, கொழும்பில் உள்ள இராஜதந்திரிகளுக்கு நேற்று அவர் விளக்கமளித்தார்.

இதன்போதே, சிறிலங்காவின் புதிய அரசாங்கம் மனித உரிமைகள் விடயத்தில் அடைந்துள்ள முன்னேற்றங்களை சர்வதேச சமூகம் ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்றுவதற்கு இன்னும் கால அவகாசமும், இடமும் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா. நிறுவனங்களுடன் ஒத்துழைப்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

மக்களின் அதிகளவிலான மீள ஒப்படைப்பதன்  மூலமும், ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துவதன் மூலமும் நாட்டிற்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு, புதிய அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து மனித உரிமை மீறல்கள் குறித்த எந்த அறிக்கையும் இல்லை என்றும், உள்ளூராட்சித் தேர்தல்கள் தேர்தல் சட்டத்தின்படி அரசாங்கத்தால் நடத்தப்பட்டன என்றும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களைக் கொண்ட அரசாங்கம், நாட்டிற்குள் உள்ள அனைத்து சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்றும், தற்போதைய நாடாளுமன்றம்சிறிலங்காவின் நாடாளுமன்ற வரலாற்றில் அதிக பெண் பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ளது என்றும் விஜித ஹேரத்  குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் தொடர்பான வழிமுறைகளை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் செயற்படுத்தி வரும் நடவடிக்கைகள் குறித்தும் அவர் வெளிநாட்டு  இராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் விரைவில் மாற்றப்படும் என்றும், நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்திலும் திருத்தங்கள் செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

தேசிய நலன்களுக்கு முன்னுரிமை அளித்து, தொழில்நுட்ப ஆதரவிற்காக ஐ.நா நிறுவனங்களுடன் ஒத்துழைக்க சிறிலங்கா உறுதியாக இருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *