வழக்கு முடியும் வரை ரணிலை சிறையில் வைக்க முயன்ற சட்டமா அதிபர்
அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்திய வழக்கில், முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை வழக்கு முடியும் வரை விளக்க மறியலில் வைப்பதற்கே சட்டமா அதிபர் திணைக்களம் முற்பட்டுள்ளது.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் திலீப பீரிஸ், ரணில் விக்ரமசிங்கவுக்கு வூல்வ்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பின் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்படாததால், அவரை வழக்கு முடியும் வரை விளக்கமறியலில் வைக்க வேண்டும் என்று கோரினார்.
பிணை வழங்குவதற்கும் அவர் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.
எனினும், கோட்டை நீதிவான் நிலுபுலி லங்காபுர அவருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டார்.
ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை தொடர்பான விதிவிலக்கான சூழ்நிலைகள் என்ற அடிப்படையில், குறிப்பாக ஆறு மருத்துவர்கள் கையெழுத்திட்ட மருத்துவ அறிக்கைகளைக் குறிப்பிட்டு- முன்னாள் அதிபரின் மருத்துவ நிலை தொடர்பான பரிசீலனைகளின் அடிப்படையில் தனது இந்த முடிவு அமைந்திருப்பதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
