மேலும்

ரணில் கைது தகவல் வெளியிட்ட வலையொளியாளரிடம் விசாரணை

ரணில் விக்ரமசிங்க கைது தொடர்பாக முன்னரே தகவல் வெளியிட்ட வலையொளியாளர் சுதந்த திலகசிறி  அல்லது சுதா குறித்து விசாரணைகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க வெள்ளிக்கிழமை  குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையானால், அவர் நிச்சயமாக கைது செய்யப்பட்டு 14 நாட்கள் காவலில் வைக்கப்படுவார் என்று வலையொளியாளர் சுதத் திலகசிறி காணொளி ஒன்றைப் பதிவேற்றியிருந்தார்.

இந்த கைது முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாக  தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் சட்டவாளர் நளின் பத்திரன,  தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னர், நீதிமன்றத்தின் முடிவை வலையொளியாளர் எவ்வாறு அறிந்திருக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதகுறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் சட்டவாளர்கள்,  சிறிலங்கா காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவு இந்த முறைப்பாட்டை ஏற்றுக்கொண்டதாக காவல்துறை பேச்சாளர் பிரெட்ரிக் வூட்லர் உறுதிப்படுத்தியுள்ளார்.

“இந்த வழக்கு இப்போது தீவிரமடைந்துள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவு அதை காவல்துறைமா அதிபரிடம்,  ஒப்படைக்க உள்ளது.

பின்னர் அவர் அதை ஒரு சிறப்பு புலனாய்வுப் பிரிவிடம் முழுமையான விசாரணையை நடத்த ஒப்படைப்பார்.

விசாரணை தொடங்கியவுடன், அந்த நபர் அதிகாரப்பூர்வமாக விசாரணைக்கு வரவழைக்கப்படுவார்.

சட்டச் செயல்பாட்டின் ஒரு பகுதியாக வலையொளியாளர் ஒரு அறிக்கையை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால  தனது அமைச்சில் இருந்து  தகவல் கசிவுகள் எதுவும் கசியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் அதிபரின் கைதுக்கான காரணம் வலையொளியாளர் கூறியதிலிருந்து வேறுபட்டது என்றும், அவரது கணிப்பு காவல்துறை விசாரணைகளுடன் அல்ல, நீதிமன்றங்களுடன் தொடர்புடையது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறையின் அதிகாரம் விசாரணை செய்வதாகும், தேவைப்பட்டால், ஒரு நபரைக் கைது செய்து 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகும்.

ஒருவரை எத்தனை நாட்கள் காவலில் இருக்க வேண்டும் என்பதை காவல்துறை தீர்மானிப்பதில்லை. அது நீதிமன்றங்களின் தனியுரிமை.

ஏதேனும் தகவல் உண்மையில் கசிந்ததா என்பதை விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாகவும்  அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *