பிள்ளையானின் 6 துப்பாக்கிதாரிகளை கைது செய்ய சிஐடி நடவடிக்கை
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தனின் கீழ், பணியாற்றிய ஆறு துப்பாக்கிதாரிகளை கைது செய்வதற்கு, குற்றப் புலனாய்வுத்துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக சிங்கள வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆட்கள் கடத்தப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை, மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களுடன் தொடர்புடையவர்களே இவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிள்ளையான் மற்றும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இனியபாரதி எனப்படும், புஷ்பகுமார் ஆகியோரிடம் நடத்தப்பட்ட நீண்ட விசாரணைகளின் போது, இந்தக் குழு பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளதாக, அரச சார்பு சிங்கள வாரஇதழ் குறிப்பிட்டுள்ளது.
இந்த விசாரணைகளின் அடிப்படையில், கொழும்பில் அண்மையில் நடந்த துப்பாக்கிச் சூடுகளுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் மட்டக்களப்பு மற்றும் வாழைத்தோட்டத்தில், கடந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
