அருண ஜயசேகர பதவியில் இருப்பது நம்பகத்தன்மையை பாதிக்கும்
மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, பாதுகாப்பு பிரதி அமைச்சராகப் பணியாற்றுவது, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் நம்பகத்தன்மையைப் பாதிக்கக் கூடும் என்று கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவும் அவரது அரசாங்கமும் இந்த விடயத்தில் பொருத்தமான முடிவை எடுக்க வேண்டும் என்று கத்தோலிக்க திருச்சபை வலியுறுத்தியுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் நடந்த நேரத்தில் அருண ஜயசேகர சிறிலங்கா இராணுவத்தின் கிழக்குத் தளபதியாக இருந்ததால், அவரது தற்போதைய பங்கு, அந்த விசாரணைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.
எனினும் அவரை பாதுகாப்பு பிரதி அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பிரதமர் ஹரிணி அமரசூரியவும், பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவும் கூறியிருந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்தின் பேச்சாளர், அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ,
அருண ஜயசேகர பாதுகாப்பு பிரதி அமைச்சராக இருப்பது, விசாரணைகளைப் பாதிக்கக்கூடும் என்று திருச்சபையும் நம்புகிறது.
இங்கே ஒரு பிரச்சினை இருப்பதாக நாங்கள் உணர்கிறோம்.
விசாரணைகளை அவரது அமைச்சு கையாளவில்லை – அவை பொது பாதுகாப்பு அமைச்சின் கீழ் வரும் காவல்துறை மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையினால் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆனாலும், அவர் ஒரு பிரதி அமைச்சராகப் பணியாற்றுகிறார், அது தாக்கத்தை ஏற்படுத்தும்.
அரசாங்கமும் சிறிலங்கா அதிபரும் இந்த பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டும். சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.
அருண ஜயசேகர ஒரு பிரதி அமைச்சராகப் பணியாற்றும்போது, விசாரணைகளில் அவரது செல்வாக்கு இருக்கலாம் என்று மக்கள் நினைப்பது இயல்பானது.
இதனால் விசாரணைகளின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுகிறது.
“கிழக்கு தளபதியாக, அவருக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லையா? இந்த விடயங்கள் விசாரிக்கப்பட வேண்டும்.
குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் வாக்குமூலம் அளித்ததாக அவர் கூறியது எனக்கு நினைவிருக்கிறது. அதன் அடிப்படையில் விசாரணைகள் முன்னேற வேண்டும்.
விசாரணைகளுக்குப் பின்னரே, அவருக்கு ஏதேனும் தொடர்பு இருந்ததா இல்லையா என்பதை நாங்கள் அறிய முடியும் என்றும், அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ குறிப்பிட்டார்.