செம்மணி புதைகுழி அகழ்வு – சர்வதேச மேற்பார்வை அவசியம்
செம்மணி கூட்டுப் புதைகுழித் தளத்தில் நடைபெற்று வரும் அகழ்வில், சர்வதேச மேற்பார்வை மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை உறுதி செய்யுமாறு, சர்வதேச சட்ட நிபுணர்கள் ஆணைக்குழு (ICJ) சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள விரிவான அறிக்கையில், காணாமல் போனவர்களின் குடும்பங்கள் மற்றும் உள்ளூர் மனித உரிமைகள் குழுக்களின் வேண்டுகோள்களை சர்வதேச சட்ட நிபுணர்கள் ஆணைக்குழு எதிரொலித்துள்ளது.
அகழ்வுகள் மற்றும் தடயவியல் விசாரணைகளைக் கையாள்வதில் மினசோட்டா நெறிமுறை போன்ற சர்வதேச சட்டத் தரங்களைப் பின்பற்றுமாறு அழைப்பு விடுத்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் கண்ணியத்தை மதிப்பதன் முக்கியத்துவத்தையும், இந்த செயல்முறை முழுவதும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் அர்த்தமுள்ள பங்கேற்பை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தையும் சர்வதேச சட்ட நிபுணர்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சர்வதேச சட்ட நிபுணர்கள் ஆணைக்குழுவின், மூத்த சர்வதேச சட்ட ஆலோசகர் மந்த்ரா சர்மா,
இந்த தடயவியல் விசாரணைகள் கண்ணியமாகவும், மிகுந்த மரியாதையுடனும், குடும்பங்களின் முழு பங்கேற்புடனும் நடத்தப்பட வேண்டும்.
இந்த குற்றங்களின் தீவிரத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கும், மிக உயர்ந்த தொழில்முறை மற்றும் சட்ட தரங்களை இந்த செயல்முறைகள் பூர்த்தி செய்வதை உறுதி செய்ய, சர்வதேச மேற்பார்வை அவசியம். என்று குறிப்பிட்டுள்ளார்.
மாணவி கிருஷாந்தி குமாரசாமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், ஒரு சிப்பாயின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து, 1998 இல் அம்பலப்படுத்தப்பட்ட செம்மணி புதைகுழித் தளம், சிறிலங்காவின் தீர்க்கப்படாத கட்டாய காணாமல் போதல்கள் மற்றும் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதன் வலுவான அடையாளமாக உள்ளது.
கிட்டத்தட்ட மூன்று பத்தாண்டுகளுக்குப் பின்னர், அண்மைய கண்டுபிடிப்புகள், நம்பகமான, வெளிப்படையான மற்றும் பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்ட விசாரணைகளுக்கான அவசரத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம், மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புகளிலிருந்து சுயாதீனமான சர்வதேச தடயவியல் நிபுணர்கள் மற்றும் பார்வையாளர்களை ஈடுபடுத்தவும், சரியான நேரத்தில் பொது புதுப்பிப்புகள், கடுமையான ஆதாரங்களைக் கையாளுதல் மற்றும் குடும்பங்களுக்கான உளவியல் ஆதரவு ஆகியவற்றை வழங்கவும் சர்வதேச சட்ட நிபுணர்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
காணாமல்போனோருக்கான பணியகம், அகழ்வைக் கண்காணித்து வரும் வேளையில், அதன் வரையறுக்கப்பட்ட செயல்திறன் மற்றும் அரசியல்மயமாக்கல் பொதுமக்களின் நம்பிக்கையை பலவீனப்படுத்தியுள்ளது.
செம்மணி விசாரணை சர்வதேச சட்டத்திற்கு இணங்க ஒரு புதிய முன்னுதாரணத்தை அமைக்க வேண்டும்.
நீண்டகாலமாக மறுக்கப்பட்ட உண்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்கான நம்பிக்கையை அளிக்க வேண்டும்.
செம்மணி தளத்தில் குழந்தைகள் உட்பட 100 க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, சிறிலங்காவின் உள்நாட்டு நிறுவனங்கள் கட்டாயமாக காணாமல் போன வழக்குகளில் நீதி வழங்குவதில் தொடர்ந்து தோல்வியடைந்ததை எடுத்துக்காட்டுகிறது.
நாட்டின் நீண்டகால தண்டனை விலக்கு வரலாறு மற்றும் நிறைவேற்றப்படாத நிலைமாறுகால நீதி வாக்குறுதிகளைக் கருத்தில் கொண்டு, சர்வதேச மேற்பார்வை அவசியம் என்பதை அது மீண்டும் வலியுறுத்தியது.
ஜெனிவா தீர்மானம் 46/1 ஆல் கட்டளையிடப்பட்டபடி, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் கண்காணிப்பு மற்றும் சிறிலங்கா பொறுப்புக்கூறல் திட்டத்திற்கான ஆணையை ஐ.நா மனித உரிமைகள் பேரவை நீடிக்க வேண்டும்.
சாட்சியங்களைப் பாதுகாத்தல் மற்றும் பொறுப்புக்கூறல் முயற்சிகளில் நிலையான சர்வதேச ஈடுபாடு அவசியம்.
2015 ஜெனிவா தீர்மானத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, சர்வதேச பங்கேற்புடன் ஒரு நீதித்துறை பொறிமுறையை நிறுவுவதற்கான சிறிலங்காவின் முந்தைய உறுதிமொழிகள் பெரும்பாலும் நிறைவேற்றப்படவில்லை.
இதற்கிடையில், காணாமல் போனோர் அலுவலகம் போன்ற உள்நாட்டு நிறுவனங்கள் நம்பகமான முடிவுகளை வழங்கவோ அல்லது பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறவோ தவறிவிட்டன.
இது உலகளாவிய ஈடுபாட்டின் அவசியத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
நிலைமாறுகால நீதிக்கான சிறிலங்காவின் உறுதிப்பாட்டின் நம்பகத்தன்மை, செம்மணி விசாரணையை அது எவ்வாறு கையாளுகிறது என்பதைப் பொறுத்தே அமையும்.
கடுமையான குற்றங்களை விசாரித்து வழக்குத் தொடர ஒரு சுயாதீனமான சிறப்பு அலுவலகத்தை உருவாக்க வேண்டும், கட்டாயமாக காணாமல் போனவர்கள் தொடர்பான 2018 சட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும். மற்றும் கடந்த கால மற்றும் தற்போதைய புதைகுழி விசாரணைகளிலிருந்து கண்டுபிடிப்புகளை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்றும் சர்வதேச சட்ட நிபுணர்கள் ஆணைக்குழு பரிந்துரைக்கிறது.
செம்மணி மற்றொரு மறக்கப்பட்ட வழக்காக மாற அனுமதிக்கக் கூடாது என்றும் சர்வதேச சமூகத்தை சர்வதேச சட்ட நிபுணர்கள் ஆணைக்குழு வலியுறுத்துகிறது.