தலைவலியாகும் தலையீடு
ஆசியான் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, மலேசியா சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்- ரஷ்யா, அவுஸ்ரேலியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார்.
ரஷ்ய மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்களுடன் நடத்திய பேச்சுக்கள் தொடர்பாக உடனடியாகவே வெளிவிவகார அமைச்சிலிருந்து அறிக்கைகள் வெளியிடப்பட்டிருந்தன.
ஆனால், கடந்த 12ஆம் திகதி சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உடன் நடத்திய, சந்திப்பு தொடர்பாக வெளிவிவகார அமைச்சு உடனடியாக எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.
அதேவேளை, சீன அரசு ஊடகங்களில் உடனடியாகவே அதுபற்றிய செய்தி வெளியாகியது.
அந்த செய்தியில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் நடத்திய பேச்சுக்களின் போது வெளிப்படுத்திய விடயங்கள் குறித்து விரிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் இரண்டு விடயங்கள் முக்கியமானவை.
ஒன்று- இலங்கையுடனான கடல்சார் மூலோபாய ஒத்துழைப்பில் மூன்றாம் தரப்பு தலையிடக் கூடாது என்ற விடயம்.
இன்னொன்று – இந்தோ- பசுபிக் மூலோபாயம் அவசியமற்றது, அதை பிராந்திய நாடுகள் ஆதரிக்க கூடாது என்பது.
இந்த இரண்டு விடயங்களும் இந்தியா மற்றும் அமெரிக்காவை நோக்கி வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள்.
இதனை சீனா அல்லது சீன வெளியுறவு அமைச்சர் ஏன் இலங்கையின் வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பின்போது வெளிப்படுத்தினார் என்பது முக்கியம்.
இலங்கை,- சீனா , இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, பாகிஸ்தான், ஈரான், இஸ்ரேல், உக்ரைன் என்று சர்வதேச அளவிலும், பிராந்தியத்திலும், முரண்பாடுகளில் ஈடுபட்டிருக்கின்ற நாடுகளுடன் சமமான உறவை பேணி வருவதாக கூறுகின்ற ஒரு நாடு.
இவ்வாறான நிலையின் மூலம், பாதுகாப்பாக நிலையில் இருப்பதாக அது நினைத்துக் கொள்கிறது.
அதைவிட அணிசேரா அமைப்பை சேர்ந்த நாடு என்றும் அடிக்கடி கூறிக் கொள்கிறது.
ஆனால் மோதல்களுடன் தொடர்புடைய பிரதான நாடுகள் மத்தியில், இலங்கை ஒரு நடுநிலையான உறவை பேணுகின்ற நாடு தானா என்ற சந்தேகம் இருக்கிறது.
மேற்குலகத்தின் இந்தோ- பசுபிக் மூலோபாயத்தில் இலங்கையும் ஒரு பங்காளியாக இருக்கிறது.
அதன் அடிப்படையில் தான், செங்கடலில் சர்வதேச கடற்படைகளின் கூட்டுச் செயலணியில் இலங்கை கடற்படை இணைந்திருக்கிறது.
இந்தோ-பசுபிக் மூலோபாயத்தின் கீழ் தான், இலங்கை கடற்படையை அமெரிக்கா வலுப்படுத்தி வருகிறது.
ஜப்பானும் அவுஸ்ரேலியாவும், இலங்கை கடற்படைக்கும் விமானப்படைக்கும் தேவையான உதவிகளை வழங்கி வருவதற்கும் அந்த மூலோபாயமே காரணம்.
வெளிப்படையான சுதந்திரமான கப்பல் போக்குவரத்தை உறுதிப்படுத்தும் வகையில், இந்தோ-பசுபிக் மூலோபாய அடிப்படையில் இந்த நாடுகள் இலங்கைக்கு தொடர்ச்சியான உதவிகளை வழங்குகின்றன.
பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகள், வழங்குகின்ற உதவிகள் மற்றும் ஒத்துழைப்புகளும் கூட, இந்தோ- பசுபிக் மூலோபாயத்தின் அடிப்படையிலானது தான்.
அப்படியிருக்க இந்த மூலோபாயம் அவசியமற்றது, பிராந்திய நாடுகளால் ஆதரிக்கப்படாது என்ற கருத்து சீன வெளியுறவு அமைச்சரால் கூறப்பட்டிருக்கிறது.
இந்த மூலோபாய கூட்டில் இலங்கை இணைந்து கொள்ளக் கூடாது என்பதே இதன் மறைமுக அர்த்தம்.
அதனை நேரடியாக கூறாமல் மறைமுகமாக வெளிப்படுத்தியிருக்கிறார், – சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி.
இதனை நேரடியாக அவரால் கூற முடியாது, அவ்வாறு கூறுவது இலங்கை மீதான சீனாவின் நேரடி அழுத்தமாக பார்க்கப்படும்.
இதில் இணைந்து கொள்ளக் கூடாது என்பதையே, பிராந்திய நாடுகள் இதில் இதற்கு ஆதரவளிக்காது என்ற ரீதியாக கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியின் இந்தக் கருத்து சர்ச்சைக்குரிய ஒன்று.
ஏற்கனவே இலங்கை, இந்தோ -பசுபிக் மூலோபாயத்துடன் இணைந்து செயல்படுகிறதோ இல்லையோ – அதனை நிராகரிக்காமல் ஒத்திசைந்து செல்கிறது என்பது உண்மை.
இவ்வாறான நிலையில் அதனை புறக்கணித்துக் கொண்டு, சீனாவுடன் இணைந்து செல்வது கடினமானது.
சீனாவின் பாதை மற்றும் அணை முன்முயற்சி என்ற பட்டுப்பாதை திட்டத்தை இலங்கை ஏற்றுக் கொண்டிருக்கிறது.
அமெரிக்காவின் எதிர்ப்பினால், அந்தக் கூட்டில் இருந்து எப்படி திடீரென விலக முடியாதோ, அதுபோலவே தான், இந்தோ -பசுபிக் மூலோபாயத்தில் இருந்தும் இலங்கையால் வெளியேற முடியாது.
அதேபோன்று, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, கடல் சார் ஒத்துழைப்பு விடயத்தில் சீனா எந்த மூன்றாம் தரப்பினரையும் குறி வைக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.
யாரையும் குறி வைத்து செயற்படவில்லை என்றும் அதேபோல, இந்த கடல்சார் ஒத்துழைப்பில் மூன்றாவது தரப்பு தலையிடக் கூடாது என்றும், அவர் கூறியிருக்கிறார்.
இது முக்கியமாக இந்தியாவுக்கு வைக்கப்பட்டிருக்கின்ற ஒரு செக்.
சீனாவும் இலங்கையும் கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருகின்றன.
குறிப்பாக சர்வதேச அளவில் சீனா மிகப்பெரிய கடற்படையுடன் ஒரு வலுவான சக்தியாக மாறிக் கொண்டிருக்கும் நிலையில், அதனிடமிருந்து போக்கப்பல்களையும் பிற வசதிகளையும் பெற்றுக்கொள்ளும் கடல்சார் ஒத்துழைப்புத் திட்டத்தில் இலங்கை இணைந்திருக்கிறது.
இந்த கடல்சார் ஒத்துழைப்பு இந்தியா அல்லது அமெரிக்காவுடனான ஒத்துழைப்பு அளவுக்கு வலுவானதல்ல.
ஆனாலும் இந்த கடல் சார் ஒத்துழைப்பு சில விடயங்களில் வலுவானதாக உள்ளதை மறுப்பதற்கு இல்லை.
இந்திய பெருங்கடலில் சீனாவின் கடல்சார் ஆர்வங்களை அல்லது அதன் பலத்தை வலுப்படுத்துவதற்கான திட்டங்களை, இலங்கை ஆதரிக்க வேண்டும் என பீஜிங் எதிர்பார்க்கிறது.
இந்தியாவைப் பொறுத்தவரையில், சீனாவின் ஆய்வுக்கு கப்பல்கள் இலங்கை கடற்பரப்பை எந்த வகையிலும் பயன்படுத்திக் கொள்வதை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.
இந்த விடயத்தில் சீனா இலங்கையுடன் நெருங்கி செயற்படுவதை இந்தியா ஏற்றுக்கொள்ளவோ – நம்பவோ மறுப்பது, இலங்கையை பொறுத்தவரையில் சிக்கலான ஒரு விடயம்.
சீன ஆய்வுக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை அடிக்கடி பயன்படுத்த தொடங்கியதும், இந்தியா கொடுத்த அழுத்தங்களால் இலங்கை அரசாங்கம் ஆய்வுக் கப்பல்களின் வருகையைத் தடை செய்தது.
இப்பொழுது அந்த தடை நடைமுறையில் இல்லாவிட்டாலும், ஆய்வுக் கப்பல்களை அனுமதி அளிப்பது தொடர்பான நிலையான நடைமுறை எதுவும் கிடையாது.
புதிய நடைமுறைகளை உருவாக்கும் வரை வெளிநாட்டுக்கு ஆய்வு கப்பல்களை அனுமதிப்பதில்லை என்ற முடிவை அரசாங்கம் எடுத்திருக்கிறது.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த போது, ஐ.நாவின் கொடியுடன் கடல்சார் ஆய்வுகளை மேற்கொள்ளும் நோர்வேயின் டொக்டர் பிரிட்ஜோவ் நான்சென் என்ற கப்பல், இலங்கைக் கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால் தற்போதைய அரசாங்கம் அந்தக் கப்பலுக்கு அனுமதி அளிக்க மறுத்து விட்டது.
இழுத்தடித்து, இடித்தடித்து, இறுதிக்கட்டத்தில் ஐந்து நாட்களுக்கு மாத்திரம் இலங்கை கடற்பரப்பில் ஆய்வுகளில் ஈடுபடுவதற்கு அரசாங்கத்தினால் அனுமதி அளிக்கப்பட்டது.
ஆனால் அது ஒரு நீண்ட விரிவான ஆய்வுகளை செய்கின்ற பயணம்.
ஜூலை 15ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 20 ஆம் திகதி வரை 35 நாட்களுக்கு மேல் ஆய்வுகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.
இலங்கை அரசாங்கம் கடைசி நேரத்தில் 5 நாட்களுக்கு மட்டும் ஆய்வு செய்ய அனுமதி அளிக்கப்படுவதற்கு முன்னரே ஐ.நா கொடியுடன் ஆய்வுகளை மேற்கொள்ளும் கப்பல், தமது பயணத்திட்டத்தை மாற்றி விட்டது.
அது இப்பொழுது மடகஸ்கார் கடற்பரப்பில் கடல் சூழலியல் ஆய்வுகளை மேற்கொள்கிறது.
அதையடுத்து அது பங்களாதேசுக்கு செல்லவுள்ளது.
இலங்கையின் கடல்சார் பொருளாதார அபிவிருத்திக்கு முக்கியமான இந்த ஆய்வு வசதியை இலங்கை அரசாங்கம் இழந்திருக்கிறது.
2030 வரை இந்தக் கப்பல் இலங்கைக்கு வராது. இது பொருளாதார ரீதியாக ஒரு பெரிய இழப்பு.
இந்த திட்டத்துக்காக ஐ.நா ஒரு மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கியிருக்கும்.
அது தவிர இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் மீன்பிடித்துறை அபிவிருத்தியை செய்து, மீன் ஏற்றுமதியை பெருக்கிக் கொள்ளக் கூடிய வாய்ப்பு இருந்தது.
அது அரசாங்கத்தின் தவறான மதிப்பீடுகள் மற்றும் கொள்கைகளால் பறிபோயிருக்கிறது.
சீனா ஆய்வுக் கப்பல்கள் தொடர்பாக எழுந்த சிக்கல்களே, இந்த வாய்ப்பை இலங்கை இழப்பதற்கும் காரணம்.
ஆனால் சீனா கடல்சார் ஒத்துழைப்பு விடயத்தில் மூன்றாம் தரப்பு தலையிடக்கூடாது என்று அடுத்தம் திருத்தமாக கூறுகிறது.
இந்த விடயத்தில் அரசாங்கம் சீனாவின் கருத்தை கேட்கின்ற நிலை நீடித்தால் அது குழப்பங்களை அதிகரிக்கும்.
அதனால் தான் வெளிவகார அமைச்சு சீன வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பு பற்றி அதிகம் வாய் திறக்காமல் இருந்திருக்கக் கூடும்.
-ஹரிகரன்
நன்றி -வீரகேசரி வாரவெளியீடு ( 20.07.2025)