சிறிலங்காவில் அணுமின் நிலையத்துக்கான 5 இடங்கள் தெரிவு
சிறிலங்கா அணுமின் நிலையத்தை அமைப்பதற்கான ஐந்து இடங்களை அடையாளம் கண்டுள்ளதாக, சர்வதேச அணுசக்தி முகமையின் மீளாய்வுக் குழு தெரிவித்துள்ளது.
சிறிலங்கா அணுசக்தி உள்கட்டமைப்பை நிறுவுவதில் முன்னேற்றம் அடைந்து வருவதாகவும், அணுசக்தி திட்டத்தில் ஈடுபடுவதற்கான புதிய கட்டுமானத் தளங்களை ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளதாகவும், அந்தக் குழு கூறியுள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த அணுசக்தி உள்கட்டமைப்பு மீளாய்வு பணியின் தொடர்ச்சியானது, ஜூலை 14 ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ளது.
2022 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மீளாய்வுப் பணியின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதில், சிறிலங்கா நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகவும், சர்வதேச அணுசக்தி முகமையின் மீளாய்வுக் குழு குறிப்பிட்டுள்ளது.
சிறிலங்கா ஏற்கனவே அணுமின் நிலையத்திற்கான ஐந்து இடங்களை அடையாளம் கண்டுள்ளது, அணு உலைகளுக்கான கொள்முதல் செயல்முறையை மேற்பார்வையிட ஒரு முகாமைத்துவக் கட்டமைப்பை நிறுவியுள்ளது, ஒரு விரிவான அணுசக்தி சட்டத்தை வரைந்துள்ளது மற்றும் 2025-2044 காலகட்டத்திற்கான அதன் தற்போதைய நீண்டகால எரிசக்தி திட்டமிடலில் அணுசக்தியைச் சேர்த்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் முக்கிய சர்வதேச அணுசக்தி முகமையின் மீளாய்வுக் குழு பணியின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதில் சிறிலங்கா தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்று சர்வதேச அணுசக்தி முகமையின் அணுசக்தி உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பிரிவைச் சேர்ந்த குழுத் தலைவர் ஜோன் ஹடாட் தெரிவித்துள்ளார்.
இது அணுசக்தி திட்டம் தொடர்பாக தேவையான ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், அறிவுப்பூர்வமான முடிவை எடுப்பதற்கும் சிறிலங்காவின் உறுதிப்பாட்டின் அளவைக் குறிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.