ரணிலின் அவசரகால பிரகடனம் சட்டவிரோதம் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு
2022ஆம் ஆண்டு பதில் அதிபராக இருந்த ரணில் விக்கிரமசிங்க, அவசரகாலச் சட்டத்தை பிரகடனம் செய்தது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும், அதன் மூலம் அவர் அடிப்படை உரிமைகளை மீறியிருப்பதாகவும் சிறிலங்கா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவினால் 2022 ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் திகதி அவசரகாலச் சட்டம் பிரகடனம் செய்யப்பட்டதன் மூலம், அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளதாக, அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன், கொள்கை மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் மற்றும் லிபரல் இளைஞர் இயக்கம் சார்பில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றத்தின் பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ தலைமையிலான 3 நீதியரசர்களைக் கொண்ட அமர்வு இன்று தமது தீர்ப்பை அறிவித்துள்ளனர்.
இதன்படி, பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ மற்றும் நீதியரசர் யசந்த கோதாகொட ஆகியோர், பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் பிரிவு 2 இன் கீழ் வெளியிடப்பட்ட அவசரகால விதிமுறைகள் தன்னிச்சையானவை மற்றும் செல்லாதவை என்று தீர்ப்பளித்துள்ளனர்.
அரகலய போராட்டம் உச்சமடைந்திருந்த போது மக்கள் போராட்டங்களைக் கட்டுப்படுத்த இந்த விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன.
அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது அடிப்படை சுதந்திரங்களை குறைத்திருப்பதாக உயர்நீதிமன்ற அமர்வின் இரண்டு நீதியரசர்களும் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர, இந்த தீர்ப்பில் இருந்து மாறுபட்ட கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவசரகால விதிகள் அடிப்படை உரிமைகளை மீறவில்லை என்று அவர் தீர்ப்பளித்துள்ளார்.
அதேவேளை, மனுதாரர்களுக்கு சட்டச் செலவுகளை செலுத்தவும் உயர்நீதிமன்ற அமர்வு, அரசாங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளது.