கறுப்பு ஜூலை 42 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று
சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விட்ட கறுப்பு ஜூலை இனப்படுகொலைகளின் 42 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று தமிழர்களால் கரிநாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.
1983ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதி வடக்கில் சிறிலங்கா படையினர் தொடங்கிய இனப்படுகொலைகளின் தொடர்ச்சியாக கொழும்பு உள்ளிட்ட தென்பகுதியில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
தமிழர்கள் வீதிகளிலும், வீடுகளிலும், பேருந்துகளிலும் வெட்டியும், சுட்டும், உயிரோடு எரித்தும் படுகொலை செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கானவர்கள் காயப்படுத்தப்பட்டனர்.
வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள் இரண்டு கட்டங்களாக தமிழ் அரசியல் கைதிகள், 52 பேர் சிங்களக் காடையர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.
தமிழர்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள் சூறையாடப்பட்டு, எரித்து நாசமாக்கப்பட்டன. இலட்சக்கணக்கான மக்கள், தமது இருப்பிடங்களை இழந்து, தென்பகுதியில் இருந்து வடக்கு நோக்கி இடம்பெயர்ந்தனர்.
ஈழத் தமிழர்களின் மனங்களில் ஆறா வடுவாக நீடிக்கும் கறுப்பு ஜூலை இனப்படுகொலைகளின் 42 ஆவது ஆண்டு நிறைவு நாளான இன்று, தமிழர் பகுதிகளில் கரி நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.
கறுப்பு ஜூலை இனப்படுகொலைகளை நினைவு கூரும் நிகழ்வுகளும் பரவலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் – முற்றவெளி முனியப்பர் ஆலயம் முன்பாக இன்று பிற்பகல் 5 மணியளவில் கறுப்பு ஜூலை இனப்படுகொலை நினைவேந்தல் தமிழ் தேசிய பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது.