செம்மணிப் புதைகுழி- பொறுப்புக்கூறலில் பிரித்தானியா உறுதி
யாழ்ப்பாணம், செம்மணிப் புதைகுழியில் நடந்து வரும் சடலங்கள் தோண்டி எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து, ஆழ்ந்த கவலை அடைந்துள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர், சாரா சம்பியன் எழுப்பிய கேள்விக்கு, எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள, பிரித்தானிய வெளியுறவு பணியக அமைச்சர் கத்தரின் வெஸ்ட், இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
செம்மணிப் புதைகுழி தளத்தில் ஒரு சுயாதீன ஐ.நா. விசாரணையை ஆதரிப்பதில் பிரித்தானிய வெளியுறவு, கொமன்வெல்த் மற்றும் அபிவிருத்தி பணியகம், என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது எனவும், சாரா சம்பியன் கேட்டிருந்தார்.
இதற்குப் பதிலளித்துள்ள பிரித்தானிய வெளியுறவு பணியக அமைச்சர் கத்தரின் வெஸ்ட்,
“நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து கலந்துரையாடவும், குறிப்பாக வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்ட வழக்குகளில் உறுதியான முன்னேற்றத்திற்காக அழுத்தம் கொடுக்கவும், பிரித்தானியா தொடர்ந்து சிறிலங்கா அரசாங்கத்தை சந்தித்து வருகிறது.
“செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழி குறித்து பிரித்தானிய அரசு ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.
மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை ஆதரிப்பதில் நாங்கள் தொடர்ந்து உறுதியாக இருக்கிறோம்.
ஜனவரி மாதம், நான் சிறிலங்காவுக்கு சென்று பிரதமர், வெளிவிவகார அமைச்சர், சிவில் சமூக அமைப்புகள், வடக்கில் உள்ள அரசியல் தலைவர்கள் உட்பட பல்வேறு பங்குதாரர்களைச் சந்தித்து மனித உரிமைகள் குறித்து கலந்துரையாடியுள்ளேன்.
கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகத்தின் அதிகாரிகள் நாடு முழுவதும் இருந்து காணாமல் போனவர்களின் குடும்பங்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி, அவர்களின் குரல்கள் கேட்கப்படுவதை உறுதிசெய்ய பணியாற்றுகிறார்கள்.
இந்தப் பிரச்சினை சிறிலங்கா அரசாங்கத்திடம் நேரடியாக எழுப்பப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் பொறுப்புக்கூற வைக்கப்படுவதை உறுதி செய்வதற்காக ஐ.நா. மனித உரிமைகள் பேரவை போன்ற சர்வதேச முயற்சிகளை நாங்கள் தொடர்ந்து வழிநடத்துகிறோம் என்று தெரிவித்துள்ளார்.