முன்னாள் மொட்டு அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன கைது
இலஞ்சம் மற்றும் ஓழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அனுராதபுர மாவட்ட அமைப்பாளராகவும், வடமத்திய மாகாண முதலமைச்சராகவும் அமைச்சராகவும், இருந்து, பின்னர், சிறிலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில், விவசாய அமைச்சராக பதவி வகித்த எஸ்.எம்.சந்திரசேன, ராஜபக்சவினருக்கு நெருக்கமானவராக இருந்தவர்.
2015 அதிபர் தேர்தலின் போது, தமக்கு நெருக்கமான ஆதரவாளர்களுக்கு 25 மில்லியன் ரூபாய் பெறுமதியான விதை நெல்லை இலவசமாக விநியோகித்தார் என்ற குற்றச்சாட்டுத் தொடர்பாகவே, எஸ்.எம்.சந்திரசேன, இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக, வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று காலை அழைக்கப்பட்ட அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர், கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து கொழும்பு பிரதம நீதிவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க முன்பாக நிறுத்தப்பட்ட எஸ்.எம்.சந்திரசேனவை, ஜூலை 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.