டொக்யார்ட் நிறுவனத்தை இந்தியாவிற்கு விற்பதற்கு எதிராக சட்ட நடவடிக்கை
கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்தின் பங்குகளை இந்திய நிறுவனத்துக்கு விற்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக முன்னிலை சோசலிசக் கட்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, சிறிலங்கா அரசாங்கத்துக்கும், இந்தியாவின் பாதுகாப்புத் தளபாட உற்பத்தி நிறுவனமான, மசாகோன் டொக் கப்பல் கட்டும் நிறுவனத்துக்கும், இடையே கையெழுத்திடப்பட்ட உடன்பாட்டை ரத்து செய்யக் கோரி, உயர்நீதிமன்றத்தில் விரைவில் மனு தாக்கல் செய்யப் போவதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்வி செயலாளர் புபுது ஜயகொடா தெரிவித்துள்ளார்.
“கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்தின் 51% பங்குகளை இந்திய நிறுவனத்திற்கு விற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.
இது மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனத்தில், அரசாங்கம் பெரும்பான்மை உரிமையை இழப்பதற்கு வழிவகுக்கும்.
நிறுவனத்தின் சொத்துக்கள் 130 மில்லியன் அமெரிக்க களுக்கு மேல் மதிப்பிடப்பட்டிருந்தாலும், பங்குகள் வெறும் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கே விற்கப்படுகிறது“ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, பரிவர்த்தனை வெளிப்படையாக கையாளப்படும் என்றும், நாங்கள் மக்களை ஏமாற்ற மாட்டோம், என்றும் குறிப்பிட்டுள்ளார்.