வோல்கர் டர்க்கும் தமிழர் தரப்பும்
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் பயணம் தமிழர் தரப்புக்கு பயன்தரும் ஒன்றாக அமைந்திருக்கிறதா – தமிழர் தரப்பு இதனை சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறதா? -என திரும்பிப் பார்க்க வேண்டியிருக்கிறது.
ஏனென்றால், போர் முடிந்து 16 ஆண்டுகளாக – பாதிக்கப்பட்ட தரப்பான தமிழர்கள் நீதிக்கான நீண்ட போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் போராட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற போதும் – அவ்வப்போது சோர்ந்து போவதும் பின்னர் மீள் எழுச்சி கொள்வதுமாக, ஒரு சகட ஓட்டநிலை இருந்து வந்திருக்கிறது.
இறுதிக்கட்டப் போருக்குப் பின்னர்- காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டங்களை தொடங்கிய போது, பெருமளவிலான மக்களின் பங்கேற்பும் ஆதரவும் காணப்பட்டது.
காலப்போக்கில் அவர்களின் போராட்டம் வலுக்குன்றி வருகிறது அல்லது வலுக்குன்றச் செய்யப்பட்டு வருகிறது.
ஆனாலும் அவர்கள் சளைக்காமல் மூவாயிரம் நாட்களைக் கடந்தும் போராட்டங்களை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
காணி அபகரிப்புக்கு எதிரான போராட்டம் அவ்வப்போது தீவிரம் பெறுவதும் பின்னர் தணிந்து போவதுமாக நீடிக்கிறது.
இதுபோல போர்க்கால மீறல்கள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் அவ்வப்போது தணிவதும் மேல் எழுவதுமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த சூழலில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் பயணம் இடம்பெறப் போவதாக தகவல்கள் வெளியானதும், அதிகம் பதற்றம் அடைந்தது தமிழர் தரப்புத்தான்.
சிறிலங்கா அரசாங்கமே அவருக்கு அழைப்பு விடுத்திருந்தது. அவ்வாறு அழைப்பு விடுக்கப்பவது தான் நடைமுறை.
அவருக்கு அழைப்பு விடுக்கப்படும் போதே, அவரது பயணத்தை எதிர்கொள்வதற்கான உத்திகளுடன் அரசாங்கம் தயாராக இருந்திருக்கும்.
புதிய அரசாங்கம் தன்னை தற்காத்துக் கொள்வதற்கும், தனக்கு ஒரு கால அவகாசத்தை தேடிக் கொள்வதற்கும்- வாக்குறுதிகளை கொடுத்து, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரை தமது பக்கம் திருப்பக் கூடிய ஆபத்தான சூழல் இருந்தது.
அதனால், தமிழர் தரப்பு பதற்றம் அடைந்தது.
ஏனென்றால், 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு பின்னர், இதுபோன்ற ஒரு சிக்கலை தமிழர் தரப்பு எதிர்கொண்டது.
போர் முடிவுக்கு வந்த பின்னர், பொறுப்புக்கூறலை நிறைவேற்றுமாறு, ஜெனிவாவில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு அழுத்தங்கள் தீவிரமாக கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்த சூழலில், 2015இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றியது.
மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சராக இருந்த மங்கள சமரவீர, ஜெனிவாவுக்கு சென்று, கலப்பு நீதிமன்ற பொறுப்புக்கூறல் பொறிமுறை தொடர்பான வாக்குறுதியை கொடுத்தார்.
அதுமாத்திரமின்றி, அதனை உள்ளடக்கிய ஜெனிவா தீர்மானத்திற்கு, சிறிலங்கா அரசாங்கமே இணைஅனுசரணையும் வழங்கியது.
ஆனால், கொடுத்த வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்றவில்லை.
அதன் பாதிப்பை, தமிழர் தரப்பு இன்று வரை அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
எனவே, புதிய அரசாங்கம் தமக்கு காலஅவகாசம் தேவை என்றோ, தமது செயற்பாடுகளை நியாயப்படுத்தியோ, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரை தமது பக்கம் இழுத்துக் கொண்டால் அது மிக மிக ஆபத்தாகி விடும் என்று தமிழர் தரப்பு- குறிப்பாக பாதிக்கப்பட்ட தரப்பினர் அச்சம் கொண்டதில் தவறில்லை.
அதற்காக அவரது பயணத்தை எதிர்கொள்ளாமல் தவிர்ப்பது அல்லது அதனை எதிர்ப்பது இன்னும் நிலைமையை சிக்கலாக்க கூடிய ஆபத்து இருந்தது.
இந்தச் சூழலில் தான், தமிழர் தரப்பு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரை எதிர்கொள்வதற்கான வியூகங்களை வகுத்தது.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் முள்ளிவாய்க்காலுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
அதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் அந்தப் பயணம் சாத்தியமாகியிருக்கவில்லை.
அதேவேளை, இறுதிக்கட்டப் போர்க்காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய பொறுப்புக்கூறல் விவகாரங்கள் கூட இந்த முறை அதிகம் முன்னிலைப்படுத்தப்படவில்லை.
இந்த விவகாரம் செம்மணிப் புதைகுழியின் பக்கம் மடை மாற்றப்பட்டு விட்டதா என்ற கேள்விகளும் சிலரால் சமூக ஊடகங்களில் முன்வைக்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.
ஆனால் செம்மணிப் புதைகுழி விவகாரம், கிட்டத்தட்ட இரண்டரை தசாப்தங்களுக்குப் பின்னர் மேல் நோக்கி கிளம்பியது தற்செயலான ஒன்றேயாகும்.
கிட்டத்தட்ட 29 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் பெருமளவில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் புதைக்கப்பட்டதாக நம்பப்படுகின்ற, செம்மணி புதைகுழி, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் பயணத்தின் போது, தமிழரின் கோரிக்கைகளை வலுப்படுத்த உதவியிருக்கிறது.
அண்மையில் இந்த மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டு, தோண்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதும், அதில் 19 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதும் -இந்த திருப்பத்துக்கு முக்கியமான காரணம்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் பயணத் திட்ட வழியில் செம்மணி அமைந்திருந்ததும் -அதனை ஒரு குறியீட்டுப் போராட்டமாக மாற்றி தமிழர் தரப்பு ஒன்றிணைந்து கொண்டதும் , இதனை வலுவானதாக்கியது.
அணையா விளக்கு என்ற பெயரில் மூன்று நாட்கள் முன்னெடுக்கப்பட்ட- ஒரு தன்னார்வ இளைஞர் அமைப்பின் முயற்சி – ஒரு பேரளவு உணர்ச்சி கொந்தளிப்பு மிக்க நிகழ்வாக அதனை மாற்றியிருக்கிறது.
அங்கு சில விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்தது உண்மை.
அரசியல்வாதிகளின் தனிப்பட்ட செயற்பாடுகள் காரணமாகவே அவை நிகழ்ந்தன என்பது அனைவராலும் ஒப்புக் கொள்ளப்படுகிறது.
அவை கூட உட்கட்சி அரசியலுடன் தொடர்புடையவை.
ஆனால், அதனை வைத்து, ஒட்டுமொத்த போராட்டத்தையும், மோசமான ஒன்றாக சித்திரிக்க முற்பட்ட தரப்புகளும் இருந்தன.
அவ்வாறான தரப்புகள், செம்மணிப் போராட்டக் களத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டவர்களை விட ஆபத்தானவர்கள்.
அவர்கள், தமிழர் தரப்பு பொறுப்புக்கூறல் கோரிக்கை- ஒன்றுபட்டு முன்வைத்துக் கொண்டிருந்த போதே அதனைச் அதனை சிறுமைப்படுத்தும் முயற்சிகளில் இறங்கி இருந்தனர்.
அதனைத் தாண்டி – அவ்வாறான முயற்சிகளைத் தாண்டி அந்தப் போராட்டம் வெற்றி அளித்திருக்கிறது.
அந்தப் போராட்டம், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரை அந்த இடத்தை நோக்கி வரவழைத்திருக்கிறது.
அவரை அணையா விளக்கின் முன் கைகூப்பி வணங்கி மலர் தூவி அஞ்சலி செலுத்த வைத்திருக்கிறது.
இது, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரை, தமது கைக்குள் கொண்டு வருவதற்கு சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிக்குப் பெருந்தடையாக அமைந்திருக்கிறது.
உணர்வுபூர்வமான கோரிக்கைகளை வெளிப்படுத்துவதற்கான அந்த வாய்ப்பு சரியாக பயன்படுத்திக் கொள்ளப்பட்டது.
ஆனால், அதை இன்னும் ஒழுங்கான முறையில்- சுய கட்டுப்பாடுடன் -இன்னும் அதிக வீச்சுடன், எழுச்சியுடன், செய்திருப்பதற்கான வாய்ப்புகள் இருந்தன என்பதை மறுப்பதற்கில்லை.
அரசியல் முரண்பாடுகள், குறுகிய அரசியல் நோக்கங்கள் போன்றவற்றைத் தாண்டி, இதுபோன்ற எழுச்சி, தன்னார்வக் குழுக்கள் மூலம், வீரியம் பெறுவதை தடுக்கின்ற சக்திகள் கூட, இத்தகைய குழப்பங்களுக்கு காரணம்.
எவ்வாறாயினும் அதனைத் தாண்டி, பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்களும், உணர்வுகளும், நீதிக்கான அவர்களின் கோரிக்கைகளும், பொறுப்புக்கூறலுக்கான அவசியமும், பாதிக்கப்பட்ட மக்களே முழுமையாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரிடம் கொண்டு சென்று சேர்கின்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.
குறிப்பிட்ட சில அரசியல்வாதிகள் மட்டும் கையாண்டு வந்த இந்த பொறுப்புக்கூறல் விவகாரம், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் இந்தப் பயணத்தினால், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவருக்கும் இடையிலான ஒன்றாக மாறியிருக்கிறது.
இது பாரம்பரியமாக இந்த விவகாரத்தை கையாண்டு வந்த அரசியல் தரப்புகளுக்கு ஏமாற்றம் அளிக்கும் ஒரு விடயம்.
தனி நபர்களாலோ அல்லது புதிய தலைமுறைக் குழுக்களாலோ இதனை தொடர்ந்து கொண்டு செல்ல முடியுமா என்பதை இப்போதே மதிப்பிட முடியாது.
ஆனால், நீதிக்கான – பொறுப்புக்கூறலுக்கான முயற்சி அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கடத்தப்பட வேண்டிய ஒன்று.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் செம்மணியிலும் வெளியிட்ட கருத்துக்கள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தை அளிக்க கூடியவை அல்ல.
செம்மணிப் புதைகுழியை பார்வையிட்ட பின்னர் அவர் கருத்து வெளியிட்ட போது, இவ்வாறான இடங்களில் தடயவியல் நிபுணத்துவம் பெற்ற சர்வதேச சுயாதீன நிபுணர்களால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டிக்கிறார்.
மீறல்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் இப்போது எதிர்பார்ப்பது சர்வதேச விசாரணையை மாத்திரமே.
அதன் ஊடாக மாத்திரமே தங்களுக்கு நீதி கிட்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
அவர்கள் இந்த முடிவிற்கு வந்தமைக்கான காரணம், உள்நாட்டு பொறுப்புக்கூறும் பொறிமுறை மீது நம்பகத்தன்மை கட்டியெழுப்பப்படாததே என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியும் இருக்கிறார்.
இது, பாதிக்கப்பட்டவர்களின் நிலைப்பாட்டுக்கு அவரும் அருகில் இருப்பதாகவே தெரிகிறது.
அந்த வகையில் பார்த்தால் இந்த பயணத்தை தமிழ் மக்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றே கூறலாம்.
ஆனாலும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வரும் செப்ரெம்பர் மாதம் சமர்ப்பிக்கப் போகும் சிறிலங்கா தொடர்பான இறுதி அறிக்கை, எந்தளவுக்கு காத்திரமானதாக இருக்கும் என்று இப்போதே மதிப்பீடு செய்ய முடியாது.
-கபில்
நன்றி – வீரகேசரி