அமெரிக்காவின் முடிவு -சிறிலங்காவின் போர்க்குற்ற விசாரணைகளை பாதிக்கும்?
சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளில் போர்க்குற்றங்கள் மற்றும் பொறுப்புக்கூறல் பணிகளை மேற்கொள்ளும், இரண்டு டசின் திட்டங்களுக்கான நிதியை நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது.
அமெரிக்க நிர்வாக மற்றும் பாதீட்டு பணியகம் இந்தப் பரிந்துரைகளை முன்வைத்திருப்பதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈராக், நேபாளம், சிறிலங்கா, கொலம்பியா, பெலாரஸ், சூடான், தென்சூடான், ஆப்கானிஸ்தான் மற்றும் கம்பியா உள்ளிட்ட போன்ற நாடுகள் இந்தப் பட்டியலில் உள்ளடங்கியிருக்கின்றன.
எனினும், இந்தப் பரிந்துரைகள் இறுதித்தீர்மானம் அல்ல எனவும், இதுகுறித்து மேன்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு இராஜாங்கத் திணைக்களத்துக்கு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட சூழலில் இந்தப் பரிந்துரை வெளியாகியுள்ளது.
போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக்கூறும் திட்டங்களுக்கான நிதியை அமெரிக்கா வெட்டும் போது, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் முன்னெடுக்கப்படும், சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்த சாட்சியங்களை சேகரிக்கும் பணியகத்தின் செயற்பாடுகள் பாதிக்கப்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவியுடன் சிறிலங்காவில் செயற்படும் சட்ட உதவிக் குழுவின் செயற்பாடுகளையும் இந்த நடவடிக்கை பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.