ஐதேகவை ஆட்சியில் வைத்திருக்கும் ஜே.ஆரின் கனவை கலைத்த பிரபாகரன்
எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவை, டி.எஸ். சேனநாயக்க உருவாக்கவில்லை. பண்டாரநாயக்க சின்ரோனி சபையிலிருந்து தோன்றிய ஒரு தலைவர்.
1947 பொதுத்தேர்தலில் சிங்கள மகா சபை வாக்குகளைப் பெறுவதன் மூலம், பண்டாரநாயக்கவை டி.எஸ். சேனநாயக்க வெற்றிபெறச் செய்தார்.
டி.எஸ். சேனநாயக்க வெற்றி பெற்று பிரதமராகி, பண்டாரநாயக்கவுக்கு அவைத் தலைவர் பதவியை வழங்கியபோதே, அவரை வெட்டுவதற்கும் புதிய தலைவர்களை உருவாக்கினார்.
முதலாவது நபர் அவரது மகன் டட்லி சேனநாயக்க. 1947 க்கு முன்னர் தான் வகித்த விவசாய அமைச்சர் பதவியை அவருக்கு வழங்கினார்.
பின்னர் பண்டாரநாயக்கவுடன் மோத ஈ சேர் ஜோன் கொத்தலாவலவை உருவாக்கினார்.
டி.எஸ். சேனநாயக்கவின் அரசாங்கத்தில் இரண்டாவது இடத்தைப் பெறுவதற்காக, பண்டாரநாயக்கவிற்கும் சேர் ஜோன் கொத்தலாவலவுக்கும் இடையே மிகப்பெரிய போராட்டம் நடந்தது.
படித்த இளைஞரான ஜே.ஆர். ஜயவர்தன நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார், அவரை ஒரு முக்கிய தலைவராக்கினார்.
சேர் ஒலிவர் குணதிலகவை வெளியுறவு அமைச்சராக நியமித்தார். அந்த நேரத்தில் அவர் சர்வதேச அரசியல் விளையாட்டை சிறப்பாக விளையாடினார்.
பின்னர், சேர் ஒலிவர் குணதிலக சிறிலங்காவின் முதல் சிங்கள ஆளுநரானார்.
டி.எஸ். சேனநாயக்க உருவாக்கிய தலைவர்களில், சேர் ஜோன் கொத்தலாவல பிரதமரானார். டட்லி சேனநாயக்க பிரதமரானார். ஜே.ஆர். ஜயவர்த்தன பிரதமராகவும் அதிபராகவும் ஆனார். சேர் ஒலிவர் குணதிலக ஆளுநராகவும் ஆனார்.
டி.எஸ். சேனநாயக்க இப்படித் தான், ஐக்கிய தேசியக் கட்சிக்கோ அல்லது தெற்கிற்கோ தலைவர்களை உருவாக்கினார்.
1947 ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டு வரை, அந்தத் தலைவர்களின் வரிசையால்தான், ஐ.தே.க. தப்பிப்பிழைத்தது.
டட்லி சேனநாயக்க இறந்ததும், ஐ.தே.க.வை பொறுப்பேற்ற ஜே.ஆர். ஜயவர்த்தன, ஐ.தே.க.வுக்கோ அல்லது தெற்கிலோ தலைவர்கள் யாரும் இல்லை என்பதை கண்டார்.
டட்லி சேனநாயக்கவின் கீழ் இருந்த பெரும்பாலான தலைவர்கள் வயதானவர்களாக இருந்தனர்.
ஐ.தே.க.வை இன்னும் பல ஆண்டுகள் உயிர்ப்புடன் வைத்திருக்க, எதிர்க்கட்சியில் இருந்து கொண்டே, ஒரு தலைமைத்துவப் பாதையை உருவாக்க ஜே.ஆர் முடிவு செய்தார்.
கட்சியின் துணைத் தலைவரை ஜே.ஆர் நியமிக்கவில்லை.
ஆனால், செயற்குழுவைக் கூட்டி தனக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தை வழிநடத்தும் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்க ஜே.ஆர் ஒரு இரகசிய வாக்கெடுப்பை நடத்தினார்.
அதன் மூலம் அவர், ஐ.தே.க.வுக்கு ஒரு தலைமைத்துவப் பாதையை உருவாக்க முயற்சித்தார்.
ஆர்.பிரேமதாச அந்த இரகசிய வாக்கெடுப்பில் யாரும் இல்லாதவராக ஆனார்.
காமினி திசாநாயக்க, லலித் அதுலத் முதலி மற்றும் ரொனி டி மெல் ஆகியோர் தோன்றினர்.
1977 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், தனது அரசாங்கத்தில் இந்த நான்கு பேருக்கும் ஜே.ஆர் மிகவும் சக்திவாய்ந்த அமைச்சர் பதவிகளை வழங்கினார்.
ரணசிங்க பிரேமதாசவை பிரதமராக்கினார்.
காமினி திசாநாயக்கவுக்கு மகாவலி அபிவிருத்தி அமைச்சர் பதவியையும், லலித் அதுலத் முதலிக்கு, வர்த்தகம் மற்றும் தேசிய பந்தோபஸ்து மற்றும் பதில் பாதுகாப்பு அமைச்சர் பதவியையும், ரொனி டி மெல்லுக்கு நிதி அமைச்சர் பதவியையும் வழங்கினார்.
விகிதாசார பிரதிநிதித்துவ முறை, ஐ.தே.க.வுக்கு நன்மை பயக்கும் என்பதால் மட்டுமல்ல, ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் அதிக வாக்குகளைப் பெறும், பிரபலமான தலைவர்களை உருவாக்குவதற்காகவும் ஜே.ஆரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
விகிதாசார பிரதிநிதித்துவ முறை ஏற்றுக்கொள்ளப்பட்ட போது, இனிமேல், விகிதாசார பிரதிநிதித்துவம் காரணமாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் பண்டாரநாயக்கர்களுக்குப் பதிலாக, மாவட்டங்களில் இருந்து புதிய தலைவர்கள் உருவாவார்கள் என்று லலித் அதுலத்முதலி கூறினார்.
பிரேமதாசவுக்குப் பின்னர் காமினி, காமினிக்குப் பின்னர் லலித் அதுலத் முதலி, அவருக்குப் பின்னர் ரொனி டி மெல் ஆகியோர் தலைவர்களாக மாறினால், ஐ.தே.க இன்னும் பல தசாப்தங்களுக்கு நாட்டில் ஆட்சியை வைத்திருக்கும் என்று ஜே.ஆர் நினைத்தார்.
ஆனால் பிரபாகரன் அதையெல்லாம் மாற்றினார்.
( படத்தில் வலமிருந்து இடமாக ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ், காமினி திசாநாயக்க, ரணில் விக்ரமசிங்க, ஜே.ஆர்.ஜயவர்த்தன)
தான் உருவாக்கிய தலைவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக படுகொலை செய்யப்படுவதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று, ஜே.ஆர். தனது சுயசரிதையில், கூறுகிறார்.
ஜே.ஆர். 1988 ஆம் ஆண்டு தீவிரவாதத்தை எதிர்கொண்டார். ரஞ்சன் விஜேரத்ன பிரேமதாசவின் கீழ் ஒரு தலைவராக உருவெடுத்தார்.
பிரேமதாச அதிபராவதற்கு முன்னர் ரொனி டி மெல் கட்சியை விட்டு வெளியேறினார்.
பிரேமதாச அதிபரானதும், லலித் அதுலத் முதலி மற்றும் காமினி திசாநாயக்கவுக்கு இடம் கொடுக்கவில்லை.
ஆனால் அவர் மூன்று தலைவர்களை உருவாக்கினார்.
முதலாவது நபர் ரஞ்சன் விஜேரத்ன. இரண்டாவது நபர் ரணில் விக்ரமசிங்க. மூன்றாவது நபர் காமினி அத்துக்கோரள.
ரஞ்சன் விஜேரத்ன, பிரேமதாச, லலித் அதுலத் முதலி, காமினி திசாநாயக்க ஆகியோர் பிரபாகரனின் குண்டுகளுக்குப் பலியான பின்னர், ரணிலும் காமினி அத்துகோரளவும் எஞ்சியிருந்தனர்.
ரணில், காமினி அத்துகோரளவை கட்சியின் பொதுச்செயலாளராக ஆக்கினார்.
ஆனால் ரணில் ஐ.தே.கவுக்கோ அல்லது வலதுசாரிகளுக்கோ தலைவர்களை உருவாக்கவில்லை.
அவர் இடதுசாரிகளுக்கு அல்லது சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கே தலைவர்களை உருவாக்கினார்.
ரணில் இல்லையென்றால், 1994இல் சந்திரிகா குமாரதுங்க ஒருபோதும் பிரதமராகியிருக்கமாட்டார்.
1994 பொதுத்தேர்தலில் சந்திரிகா குமாரதுங்கவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.
அப்போது அவர் அரசாங்கத்தை அமைப்பதில் தீர்க்கமான பங்கை வகித்தது, அஷ்ரப்பில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.
பின்னர் , காமினி திசாநாயக்க, ‘ராஜாலிய’ ( கழுகு சின்னம்) கட்சியை விட்டு வெளியேறி, ஐ.தே.கவில் சேர்ந்து 1994 பொதுத்தேர்தலில் போட்டியிட்டு, இரண்டாவது முறையாக ஐ.தே.கவின் தலைவராக மறு அவதாரம் எடுத்தார்.
அஷ்ரப்பின் ஆதரவுடன், ஐதேக அரசாங்கத்தை அமைக்க, காமினி திசாநாயக்க தனக்குத் தெரிந்த அனைத்து விளையாட்டுகளையும் விளையாடினார்.
அவர் அப்போதைய அதிபர் டி.பி. விஜேதுங்கவிடம், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்கவை பிரதமராகப் பதவியேற்க அழைத்து, அவருக்கும் சந்திரிகாவிற்கும் இடையே பிரச்சினையை உருவாக்கச் சொன்னார்.
இதற்கிடையில், கிழக்கில் இருந்த அஷ்ரப்பிற்கு ஒரு உலங்குவானூர்தி அனுப்பப்பட்டு, அவர் அங்கு அழைத்து வரப்பட்டார்.
ஐதேக அரசாங்கத்தை அமைப்பது குறித்து கலந்துரையாடிக் கொண்டிருந்தது.
அந்த நேரத்தில், ரணிலும் காமினி திசாநாயக்கவும் ஒருவருக்கொருவர் விரோதமாக இருந்தனர்.
காமினி ஐதேகவில் இணைந்து கொண்டதே அதற்குக் காரணம்.
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவி விலக வேண்டாம் என்று ரணில் விக்ரமசிங்க அழுத்தம் கொடுத்தார்.
ஆனால், பெரும்பான்மையை பெற்றுக் கொள்ளும் வரை பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டாம் என்று, அதிபர் டி.பி. விஜேதுங்க மூலம் ரணிலுக்கு ஒரு செய்தியை அனுப்பினார் காமினி திசாநாயக்க.
பெரும்பான்மையை பெற்றுக் கொண்டாலும், காமினி தனக்கு பிரதமர் பதவியை வழங்கமாட்டார் என்பது ரணிலுக்குத் தெரியும்.
அவர் ரவி கருணாநாயக்கவின் வீட்டில், சந்திரிகா குமாரதுங்கவைச் சந்தித்து, ஒரு உடன்பாடு செய்து பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.
அந்த நேரத்தில், ரவி கருணாநாயக்க சந்திரிகாவின் பொதுஜன முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக இருந்தார்.
ரணில் பிரதமர் பதவியில் இருந்து விலகியபோது, டி.பி.விஜேதுங்க, சந்திரிகாவை ஆட்சியமைக்க அழைக்க வேண்டியிருந்தது.
அப்போது சந்திரிகாவை ஆதரிக்க வேண்டும் என்று, அஷ்ரப் காமினி திசாநாயக்கவிடம் கூறினார். காமினி உதவியற்றவராக இருந்தார்.
ரணில் ஐ.தே.க.வின் தலைவரான பின்னர், சந்திரிகா குமாரதுங்க ரணிலுக்கு பயந்தார். அதனால் அவர் பட்டலந்த ஆணைக்குழுவை நியமித்து ரணிலை விரட்டியடித்தார்.
இந்த நேரத்தில், சந்திரிகாவைத் தாக்குவதற்கு, அவரது அரசாங்கத்திற்குள் இருந்து ஒரு தலைவரைக் கண்டுபிடித்தார் ரணில்.அவர் தான் மகிந்த ராஜபக்ச.
மகிந்த ராஜபக்ச, சந்திரிகாவுடன் மோதியபோது, மகிந்த அம்பாந்தோட்டையில் வீழ்ச்சியடைந்தார்.
மகிந்த வீழ்ந்தபோது, அரசியலுக்குப் புதிதாக வந்த சஜித் பிரேமதாச அம்பாந்தோட்டையில் இருந்து தலையெடுக்கத் தொடங்கினார்.
ஆனால், சஜித்தை அடக்கி, மகிந்த ராஜபக்ச, அம்பாந்தோட்டையில் ஏகபோகத் தலைமையை நிறுவ ரணில் அனுமதித்தார்.
2002ஆம் ஆண்டு ரணில் பிரதமரானபோது, அப்போதைய அதிபர் சந்திரிகா குமாரதுங்க, ரத்னசிறி விக்ரமநாயக்கவை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்தார்.
இருப்பினும், அவரை நீக்கிவிட்டு, மகிந்த ராஜபக்சவை, எதிர்க்கட்சித் தலைவராக்க மகிந்த-ஜெயராஜ் பெர்னான்டோ புள்ளேபோட்ட சதித்திட்டத்தை ரணில் ஆதரித்தார்.
மகிந்தவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொண்டார்.
ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிந்தவுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேச ரணில் அனுமதிக்கவில்லை.
இறுதியில், மகிந்த ராஜபக்ச, ரணிலை வீழ்த்தி நாட்டின் அதிபரானார்.
2015 ஆம் ஆண்டில், மகிந்தவை தோற்கடிக்க சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் மற்றொரு தலைவரை ரணில் உருவாக்கினார்.
அவர் தான் மைத்திரிபால சிறிசேன.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் அவரைத் தவிர வேறு எந்த வேட்பாளரும் போட்டியிட முன்வரக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில், மைத்திரி வேட்பாளர் ஆக்கப்பட்டார்.
அந்த நேரத்தில், சஜித் பிரேமதாச வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தால், அவர் வெற்றி பெற்றிருப்பார்.
2022 ஆம் ஆண்டில், மகிந்தவின் உதவியுடன் ரணில் அதிபரானார். சஜித்தை தோற்கடிக்க அதிபர் தேர்தலில் அவர் போட்டியிட்டார்.
ரணில் போட்டியிட்டதன் காரணமாக அனுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்றார்.
2020 பொதுத்தேர்தலில் ரணில் விக்ரமசிங்க பதவி இழந்த பின்னர், சஜித்தை தோற்கடிப்பதற்காக, அனுரகுமார திசாநாயக்கவை ஊதிப் பெருப்பித்தார்.
அதிபரான பிறகும் அவர் அதையே செய்தார்.
இறுதியில், இடதுசாரிகள் அல்லது சிறிலங்கா சுதந்திரக் கட்சி- ஐக்கிய முன்னணி படைக்கு, ஒரு புதிய தலைவர் உருவாக்கப்பட்டார். அவர் தான் அனுர.
டி.எஸ்.சேனநாயக்க, ஜே.ஆர். ஜயவர்த்தன போன்று ரணில் வலதுசாரி தலைவர்களை உருவாக்கியிருந்தால், சந்திரிகா, மகிந்த, மைத்திரி, அனுரகுமார போன்ற கதாபாத்திரங்கள் இருந்திருக்காது.
அப்படி நடந்திருந்தால், 1994 முதல் 2024 வரையிலான 30 ஆண்டுகளில் பாதிக்கும் மேற்பட்ட காலம் தெற்கை அல்லது. நாட்டை ஐதேகவே ஆட்சி செய்திருக்கும்.
ஆங்கிலத்தில் – உபுல் ஜோசப் பெர்னான்டோ