அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்தில் இழுபறி
அம்பாந்தோட்டையில் 3.7 பில்லியன் டொலர் செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நிறுவும் சீனாவின் சினோபெக் நிறுவனத்தின் திட்டம், ஆறு மாதங்களாக முடங்கிப் போயுள்ளது.
உள்ளூர் சந்தையில் எரிபொருளை விநியோகிப்பது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திற்கும் சீன நிறுவனத்திற்கும் இடையில் இன்னமும் இணக்கப்பாடு ஏற்படாமையே இந்த நிலைக்கான காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில், சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவின் சீனப் பயணத்தின் போது இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டது.
இந்த முதலீட்டின் மூலம், நாள் ஒன்றுக்க, 200,000 பீப்பாய்கள் உற்பத்தி திறன் கொண்ட அதிநவீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அம்பாந்தோட்டையில் அமைக்க சினோபெக் திட்டமிட்டுள்ளது.
சுத்திகரிப்பு நிலையத்தின் உற்பத்தியில் கணிசமான பங்கு ஏற்றுமதிக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கணிசமான அந்நிய செலாவணி வருவாயை ஈட்ட முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், சினோபெக் சுத்திகரிக்கப்படும் பெட்ரோலியப் பொருட்கள் உள்நாட்டு சந்தையில் தடையின்றி சந்தைப்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று கோருகிறது.
சிறிலங்கா அரசாங்கம் அதன், சந்தைப் பங்கில் 20 சதவீதத்தை மாத்திரம், சீன நிறுவனத்துக்கு வழங்க இணங்கியுள்ளது.
இதனால் ஏற்பட்டுள்ள இழுபறியே இந்த திட்டத்தை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதங்களுக்கு காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.