மடகஸ்கார் செல்கிறது ஐ.நா ஆய்வுக் கப்பல்- சிறிலங்கா ஏமாற்றம்
சிறிலங்கா அரசாங்கம் அனுமதி கொடுக்கத் தாமதம் ஏற்பட்டதால், ஐ.நா.வின் உணவு விவசாய நிறுவனத்தின் ஆய்வுக்கப்பலான டொக்டர் பிரிட்ஜோவ் நான்சென் கொழும்பு வருவதற்கு வாய்ப்பில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆய்வுக் கப்பல், ஜூலை 15ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 20ஆம் திகதி வரை சிறிலங்கா கடற்பரப்பில் கடல் சூழலியல் ஆய்வுகளை ஐ.நாவின் நிதியுதவியுடன் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது.
எனினும், வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களை அனுமதிப்பது தொடர்பான நிலையான நடைமுறைகளை உருவாக்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக-சிறிலங்கா அரசாங்கம் இந்தக் கப்பலை அனுமதிக்க மறுத்தது.
ஐ.நாவின் நிதியுதவி மற்றும் வசதிகளை இழக்கும் நிலை ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்ட நிலையில், ஓகஸ்ட் 15ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை ஆய்வுகளை மேற்கொள்வதற்கு சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க இந்த வாரத் தொடக்கத்தில் அனுமதி அளித்திருந்தார்.
ஆயினும், சிறிலங்கா அதிபரின் ஒப்புதல் தாமதமாகவே கிடைத்ததால், அந்தக் கப்பல் கொழும்பு வர வாய்ப்பில்லை என்றும், அனுமதி வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, சிறிலங்காவுக்குப் பதிலாக மடகாஸ்கரில் ஆய்வுகளை மேற்கொள்ள, அது தீர்மானித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.