காணிகளை அபகரிக்கும் அரசிதழுக்கு இடைக்காலத் தடை
வடக்கு மாகாணத்தில் 5,941 ஏக்கர் காணிகளின் உரித்து தொடர்பாக, தொடர்பாக வெளியிடப்பட்ட அரசிதழ் அறிவித்தலை இடைநிறுத்தி உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.
2025 மார்ச் 28 ஆம் திகதி, அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட 2430 ஆம் இலக்க அரசிதழ் அறிவிப்பில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள காணிகளின் உரிமையாளர்கள் 2025 ஜூன் 28 ஆம் திகதிக்கு முன்னர், அந்த காணிகளுக்கு உரிமை கோரவில்லை என்றால்,அவை அரசாங்கத்துக்கு உரித்தானதாக கருதப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த அரசிதழை ரத்துச் செய்வதாக சிறிலங்கா அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்த போதும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், குறித்த அரசிதழுக்கு எதிராக அடிப்படை உரிமைகள் மனுவை தாக்கல் செய்திருந்தார்.
நீதிபதிகள் யசந்த கோதாகொட, சம்பத் அபேகோன் மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோரைக் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு இன்று இந்த மனுவை விசாரித்து, இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.