செம்மணிப் புதைகுழியில் தோண்டத் தோண்ட வெளிப்படும் எலும்புக்கூடுகள்
யாழ்ப்பாணம்- செம்மணி சித்துபாத்தி மயானத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் தோண்டத் தோண்ட மனித எலும்புக்கூடுகள் கிடைத்து வருகின்றன.
இந்தப் புதைகுழி கண்டறியப்பட்ட பின்னர், முதல்கட்டமாக தோண்டும் பணி மேற்கொள்ளப்பட்ட போது, 3 குழந்தைகள் உள்ளிட்ட 19 பேரின் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அகழ்வுக்கான நிதி கிடைக்காத நிலையில் நிறுத்தப்பட்ட அகழ்வுப் பணி இரண்டாவது கட்டமாக நேற்று தொடங்கப்பட்டது.
இதன்போது, ஒரு குழந்தை உள்ளிட்ட 3 பேரின் மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டன.
இவை இன்று அகழ்ந்தெடுக்கப்பட்ட அதேவேளை மேலும் தோண்டும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது இன்றும் இரண்டு மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டதுடன் மேலும் பல மனித எலும்புகளும் மீட்கப்பட்டுள்ளன.
இதுவரை 24 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் இந்த புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டுள்ள நிலையில் நாளையும் அகழ்வுப் பணி தொடரவுள்ளது.