தண்டனை விலக்கு பொறியில் சிறிலங்கா – எச்சரித்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர்
சிறிலங்காவில் போரின் போது நடந்த குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்ய வேண்டும் என்று, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடந்த ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படும் பிரச்சினையை நாடு தீர்க்க வேண்டும் என்றும் அவர் அங்கு வலியுறுத்தியுள்ளார்.
சிறிலங்கா தற்போது “தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கும் பொறியில்” இருக்கிறது.
மிகக் கடுமையான குற்றங்களைச் செய்தவர்களைக் கணக்கில் எடுத்துக் கொள்வது… மிக முக்கியமானது.
நீதிக்கு இன்றியமையாதது. இனிமேல் நிகழாமல் தடுப்பதற்கு இன்றியமையாதது.
நினைத்துப் பார்க்க முடியாத வலி மற்றும் இழப்பைச் சந்தித்த பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்றியமையாதது. எதிர்காலத்திற்கு இன்றியமையாதது.
சிறிலங்கா பல தசாப்தங்களாகப் பிரிவினை மற்றும் வன்முறையிலிருந்து மீண்டு வருகிறது. அதே நேரத்தில் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியையும் எதிர்கொள்கிறது.
சிறிலங்கா வன்முறையின் முரண்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், நிகழ்வுகள் பற்றிய பகிரப்பட்ட புரிதலை நோக்கிச் செயற்பட வேண்டும், நீதி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.என்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.