பேரெழுச்சி கண்டது செம்மணி – அணையா விளக்கு போராட்டத்தில் குவியும் மக்கள்
செம்மணி மனிதப் புதைகுழிகளுக்கு நீதி கோரியும்- சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க வலியுறுத்தியும் முன்னெடுக்கப்படும் அணையா விளக்கு போராட்டம் பேரெழுச்சியுடன் இடம்பெற்று வருகிறது.
நேற்று முன்தினம் செம்மணி வளைவு பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு இரவுபகலாக முன்னெடுக்கப்பட்டு வந்த அணையா விளக்கு போராட்டத்தில், பெருமளவு மக்கள் இன்று உணர்வெழுச்சியுடன் அணி திரண்டுள்ளனர்.
இன்று காலை தொடங்கி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், செம்மணிப் பகுதியில் வந்து குவியத் தொடங்கினர்.
காலை 10.10 மணியளவில் அணையா விளக்கின் முன்பாக- செம்மணியில் புதைக்கப்பட்ட உறவுகளுக்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கும் மக்கள் அங்கு மலர் அஞ்சலி செலுத்திவிட்டு போராட்டத்தில் இணைந்து கொண்டிருக்கின்றனர்.
அதேவேளை வலிகாமம் வடக்கில், சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்க கோரி கடந்த 5 நாட்களாக மயிலிட்டியில் போராட்டம் நடத்தி வந்த நூற்றுக்கணக்காக மக்களும், அணையா விளக்குப் போராட்டத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ள மக்கள், செம்மணிப் புதைகுழி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகள் குறித்து சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும், கையெழுத்துக்கள் திரட்டும் பணியும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இன்று மதியம் பேரணியாகச் சென்று, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரை சந்தித்து கோரிக்கை மனுக்களை கையளிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், திருகோணமலையில் இருந்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர், வோல்கர் டர்க், பிற்பகல் 3 மணிக்குப் பின்னரே யாழ்ப்பாணம் வந்து சேர்வார் என எதிர்பார்க்கப்படுவதால், இந்தப் பேரணி ஆரம்பிக்கப்படுவது தாமதம் ஏற்பட்டுள்ளது.