செம்மணியில் தொடங்கியது ‘அணையா விளக்கு’ போராட்டம்.
செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி, அணையா விளக்கு போராட்டம் இன்று காலை ஆரம்பமாகியுள்ளது.
யாழ்ப்பாணம் நகருக்கு வெளியே செம்மணி வளைவுப் பகுதியில் இன்று காலை 10.10 மணியளவில் அணையா விளக்கு ஏற்றலுடன் இந்தப் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மக்கள் செயல் என்ற தன்னார்வ இளையோர் அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இந்தப் போராட்டம், எதிர்வரும் புதன்கிழமை பிற்பகல் 2 மணி வரை- இரவுபகலாக தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளது.
செம்மணியில் கொன்று புதைக்கப்பட்ட உறவுகளுக்கும் கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கும் சர்வதேச நீதி கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இந்தப் போராட்டத்தின் இறுதியில், வரும் புதன்கிழமை யாழ்ப்பாணம் வரவுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரிடம் மனுக் கையளிக்கும் வகையில், செம்மணியில் இருந்து பேரணி ஒன்றும் நடத்தப்படவுள்ளது.
மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டாளர்கள் இந்தப் போராட்டத்தின் நோக்கத்தை தெளிவுபடுத்தியதுடன், ஊடகங்கள் சரியான முறையில் தகவல்களை பகிர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிறிதரன், அர்ச்சுனா ஆகியோரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் மணிவண்ணன், மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் பலரும், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், மதகுருமார், பொதுமக்கள் எனப் பெருமளவானோர் இணைந்து கொண்டுள்ளனர்.