பணிந்தது சிறிலங்கா – ஐ.நா ஆய்வுக்கப்பலுக்கு அனுமதி
சிறிலங்கா கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு ஐ.நா கொடி தாங்கிய டொக்டர் பிரிட்ஜோவ் நான்சன் ஆய்வுக் கப்பலுக்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.
வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்கள் தொடர்பான நிலையான செயற்பாட்டு வழிமுறைகளை உருவாக்கும் வகை எந்த வெளிநாட்டுக் கப்பல்களையும் சிறிலங்கா கடற்பரப்பில் அனுமதிப்பதில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்திருந்தது.
இதனால், ஜூலை 15ஆம் திகதி முதல், ஓகஸ்ட் 20ஆம் திகதி வரை சிறிலங்கா கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த டொக்டர் பிரிட்ஜோவ் நான்சன் கப்பலுக்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை.
ஐ.நாவின் உணவு விவசாய நிறுவனத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்படவிருந்த ஆய்விற்கு சிறிலங்கா அரசாங்கம் தடைகளை ஏற்படுத்தியதால், பொருளாதார ரீதியாக பாதிப்புகள் பலவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என ஐ.நா தரப்பில் எச்சரிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஐ.நாவின் உணவு விவசாய நிறுவனத்தின் துணையுடன் டொக்டர் பிரிட்ஜோவ் நான்சன் கப்பல் சிறிலங்கா கடற்பரப்பில் ஓகஸ்ட் 15ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை ஆய்வுகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.