செம்மணியில் இன்று தொடங்குகிறது ‘அணையாள விளக்கு’ போராட்டம்
செம்மணிப் புதைகுழிக்கு நீதி கோரி இன்று முதல் மூன்று நாட்களுக்கு யாழ்ப்பாணத்தில் அணையா விளக்கு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
மக்கள் செயல் என்ற அமைப்பின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணிக்கு இந்தப் போராட்டம் செம்மணிப் பகுதியில் ஆரம்பமாகவுள்ளது.
இன்று தொடக்கம், எதிர்வரும் 25ஆம் திகதி புதன்கிழமை வரை இந்தப் போராட்டம் இரவுபகலாக இடம்பெறும்.
இன்று காலை 10 மணிக்கு அணையா விளக்கு ஏற்றப்பட்டு தொடர்ச்சியாக அது மூன்று நாட்களும் எரியவிடப்படும்.
இன்றும் நாளையும்- அமைதியான முறையில் செம்மணியில் கொன்று புதைக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரும். பல்வேறு அரங்க நிகழ்வுகளும், இடம்பெறவுள்ளன. கண்காட்சியும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் புதன்கிழமை செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட வரும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கின் கவனத்தை ஈர்க்கும் வகையில் – பெரியளவிலான கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்திற்கு தமிழ் அரசுக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
இதற்கு வலுச் சேர்க்கும் வகையில் மட்டக்களப்பில் இன்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.