டில்வினின் சீனப் பயணமும் 4 பில்லியன் டொலர் தூண்டிலும்
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச, சிறிலங்காவை வங்குரோத்து நாடாக அறிவிக்கவிருந்தபோது, அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சவின் மூலம், சீனாவிடமிருந்து ஒரு திட்டம் அவருக்கு முன்வைக்கப்பட்டது.
வங்குரோத்துநிலையை அறிவிக்காமல், சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லாமல், சீனாவிடமிருந்து 4 பில்லியன் டொலர் கடனைப் பெறுவதே அந்தத் திட்டமாகும்.
அப்போதைய மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இந்த முன்மொழிவை முன்வைத்தார். அவர் சீனாவின் நம்பிக்கையைப் பெற்ற ஒருவர்.
சீனாவுடன் இந்த, உடன்பாடு குறித்துப் பேச்சு நடத்தியவர் அவர்தான்.
சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதை, கொள்கை ரீதியாக ஒருபோதும் ஆதரிக்காதவர் அவர்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் காரணமாக, அரசாங்கத்துக்கு சாதகமாக இருக்காது என்பதே அதற்கான காரணம்.
சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் மூலம், மகிந்த ராஜபக்சவுக்கும் சீனப் பிரதமருக்கும் இடையில் ஒரு மெய்நிகர் கலந்துரையாடலை ஏற்பாடு செய்து, 4 பில்லியன் டொலர் கடன் திட்டத்திற்கு, மகிந்தவின் ஒப்புதலைப் பெற்றுக் கொண்டார்.
இந்த திட்டத்திற்கு கோட்டாபயவை இணங்க வைக்க, மகிந்த ராஜபக்ச முயற்சித்த போதிலும், கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசகர்கள் அதற்கு உடன்படவில்லை.
வங்குரோத்து நிலையை அறிவித்து, சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல வேண்டும் என்பதே அவர்களின் ஆலோசனையாக இருந்தது.
கோட்டாபய ராஜபக்ச, சீன முன்மொழிவை நிராகரித்து சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல முடிவு செய்தார்.
இப்போது, இந்த திட்டம் குறித்து ஜே.வி.பிக்குள் மீண்டும் ஒரு கலந்துரையாடல் நடந்துள்ளது.
அண்மையில் சீனா சென்ற ஜே.வி.பி பொதுச்செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர்கள், இது குறித்து பேச்சு நடத்தினார்களா என்பது தெரியவில்லை.
சீனா மீண்டும் இந்த திட்டத்தை கொண்டு வந்தால், அது இந்தியாவை குறிவைக்கும்.
சிறிலங்காவுக்க சீனாவின் உதவியை இலகுபடுத்துவதற்காக சீனா ஒரு சீன ஆய்வுக் கப்பலை நிபந்தனையாக முன்வைக்கும்.
சிறிலங்காவின் கடல் பகுதியில் ஆராய்ச்சி செய்வதை விட இந்தியாவை தூண்டிவிடவே சீனா விரும்புகிறது.
அண்மையில், பண்டாரநாயக்க சர்வதேச உறவுகளுக்கான மையத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில், உரையாற்றிய சிறிலங்காவுக்கான ரஷ்ய தூதுவர் – ரஷ்யாவும் சீனாவும் சிறிலங்காவுக்கு உதவத் தயாராக இருந்தாலும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சாதகமாக பதிலளிக்கவில்லை என்று கூறியிருந்தார்.
இந்தியா மற்றும் மேற்கு நாடுகளுக்கு எதிரான சீன மோதல் இப்போது சிறிலங்கா அரசாங்கத்திற்குள் ஊடுருவியுள்ளது.
டில்வின் சில்வா மற்றும் பிமல் ரத்நாயக்க ஆகியோர் சீன ஆதரவு பெற்றவர்கள்.
அனுரகுமார திசாநாயக்க, ஹரினி அமரசூரிய மற்றும் விஜித ஹேரத் ஆகியோர் மேற்கத்திய ஆதரவு மற்றும் இந்திய ஆதரவு பெற்றவர்கள்.
ரணில் விக்கிரமசிங்கவின் சர்வதேச நாணயத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
ஆனால் டில்வின் சில்வா மற்றும் பிமல் ரத்நாயக்க ஆகியோர், அது ஜேவிபியின் ஆதரவுத் தளத்திற்கு பெரிதும் தீங்கு விளைவிக்கும் என்று நினைக்கிறார்கள்.
எனவே ஜேவிபியின் சித்தாந்த ரீதியாக, அவர்களுக்கு நெருக்கமாக இருக்கும் சீனாவுடன் செல்ல வேண்டும்.
அனுரவின் அரசாங்கம் படிப்படியாக மகிந்தவின் அரசாங்கமாக மாறுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
சிறுபான்மையினர் விடயத்தில், நீதிபதிகள் நியமன விடயத்தில், உள்ளூராட்சி சபைகளில் அதிகாரத்தைக் கைப்பற்றும் விடயத்தில், அவர்கள் மகிந்தவின் அரசாங்கத்தின் பண்புகளைக் காட்டுகிறார்கள்.
மகிந்த சீனாவுடன் சென்றது போல், தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் சீனாவுடன் செல்ல முடிவு செய்யக் கூடும்.
சீனக் கொடியை சுட்டிக்காட்டி, சர்வதேச நாணய நிதியத்துடன் சாதகமான உடன்பாட்டில் நுழைவதன் மூலம் அவர்கள், இந்தியாவையும் மேற்கத்திய நாடுகளையும் பயமுறுத்த முயற்சிக்கிறார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ஆங்கில மூலம் – உபுல் ஜோசப் பெர்னான்டோ