எரிந்த கப்பலை அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு கொண்டு வர திட்டம்
இந்தியாவின் கேரள மாநில கடற்கரைக்கு அப்பால் தீப்பற்றி எரிந்த வான் ஹாய் 503 (Wan Hai 503) என்ற கொள்கலன் தாங்கி கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டு வரப்படவுள்ளது.
கேரள கரையில் இருந்து 72 கடல் மைல் தொலைவில் தீவிபத்துக்கு உள்ளான இந்தக் கப்பலில் இருந்த 22 மாலுமிகளில் 18 பேர் மீட்கப்பட்டனர்.
ஏனைய 4 மாலுமிகளை தேடும் பணி கடந்த 10 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட போதும், எந்தப் பலனுமின்றி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
தற்போது கப்பலில் ஏற்பட்ட தீ முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கப்பலை அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அருகில் உள்ள துறைமுகம் என்ற வகையில் அது அம்பாந்தோட்டைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து 480 கடல் மைல் தொலைவில் அந்தக் கப்பல் தற்போது தரித்து நிற்கிறது.
கப்பல் உரிமையாளர்களான வான் ஹை லைன்ஸ் நிறுவனம், வணிக உறவுகளைக் கொண்ட துறைமுகம் என்பதைக் கருத்தில் கொண்டு, அதனை அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டு செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
சிறிலங்கா அதிகாரிகளின் அனுமதி கிடைக்காவிட்டால், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஜெபல் அலி மற்றும் பஹ்ரைன் துறைமுகங்களுக்கு கப்பலைக் கொண்டு செல்வதற்குப் பரிசீலிக்கப்படுகிறது.
கடல் கொந்தளிப்பும் காற்றும் குறைந்துவிட்டதால், இழுவைப் படகு ஒன்று அதைக் கட்டுப்படுத்தி வருகிறது.
வெளியில் தெரியாவிட்டாலும் கப்பலில் புகை எழுகிறது. கப்பலின் உலோக பாகங்களை குளிர்விக்க தண்ணீர் விசிறப்பட்டு வருகிறது.
நிபுணர்கள் குழு, கொள்கலன்களுக்கு ஏற்பட்ட சேதம் மற்றும் காணாமல் போன பணியாளர்கள் யாராவது இருக்கிறார்களா என்பதை ஆய்வு செய்து வருகிறது.
அதேவேளை இந்தக் கப்பலில் இருந்து கடலில் விழுந்த கொள்கலன்களின் காணப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் உள்ளிட்ட – சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய பொருட்கள், யாழ்ப்பாணம் நெடுந்தீவு, புங்குடுதீவு மற்றும் புத்தளம் கற்பிட்டி கடற்கரைகளில் கரையொதுங்கி வருகின்றன.