ரம்புக்வெல்ல குடும்பத்தில் ஆறு பேர் கைது- ஐவர் பிணையில் விடுதலை
பணச் சலவைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் இரண்டு மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கொழும்பு பிரதம நீதிவான் தனுஜ லக்மாலி ஜயதுங்க முன்னிலையில் நிறுத்தப்பட்ட போது, சாமித்ரி ஜனனிக்க ரம்புக்வெல்ல, அமாலி நயானிக்க ரம்புக்வெல்ல மற்றும் இசுரு புலஸ்தி மேஸ் ஆகியோரை தலா 50 ஆயிரம் ரூபா காசுப் பிணை மற்றும், 5 மில்லியன் ரூபா பெறுமதியான பிணைக்கு மூவர் கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அத்துடன் மூவருக்கும் பயணத் தடையும் விதிக்கப்பட்டது.
எனினும், சாமித்ரி ஜனனிக்க ரம்புக்வெல்ல பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால், சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஏனைய இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
அதேவேளை, நேற்று கைது செய்யப்பட்டு, பிணை நிபந்தனைகளை நிறைவேற்றாததால், சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மற்றொரு மகள் ஆகியோர் இன்று பிணை நிபந்தனைகளை நிறைவேற்றியதை அடுத்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.