யாழ். மாவட்டத்தில் இரண்டு சபைகளில் ஆட்சியமைத்தது தமிழ் அரசு
யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று தவிசாளர் தெரிவு இடம்பெற்ற மூன்று உள்ளூராட்சி சபைகளில் இரண்டில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆட்சியமைத்துள்ளது.
இன்று முற்பகல் காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு இடம்பெற்றது.
இதன்போது. சுயேட்சைக் குழுவைச் சேர்ந்த கிருஷ்ணன் கோவிந்தராசன் தவிசாளராக போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
11 உறுப்பினர்களை கொண்ட இந்த பிரதேச சபையில், தலா இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட சுயேட்சைக் குழு, தமிழ் தேசிய பேரவை, தமிழ் மக்கள் கூட்டணி என்பன, கூட்டாக இணைந்து ஆட்சியமைத்துள்ளன.
வலிகாமம் மேற்கு பிரதேச சபை
வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக ஜயந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இன்று மதியம் தவிசாளர் தெரிவு பகிரங்க வாக்கெடுப்பு முறையில் இடம்பெற்றது.
இதன் போது தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் முன்மொழியப்பட்ட ஜயந்தன் 15 வாக்குகளைப் பெற்று தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழ்த் தேசிய பேரவையைச் சேர்ந்த தர்மலிங்கம் நந்தகுமார் 7 வாக்குகளைப் பெற்றார்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உறுப்பினர் குமார் தமிழ் அரசு வேட்பாளருக்கு மாறி வாக்களித்து விட்டதாக கூறிய போதும் அது கருத்தில் கொள்ளப்படவில்லை.
அவரை ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது.
பிரதி தவிசாளராக 14 வாக்குகளைப் பெற்று கந்தையா இலங்கேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வலிகாமம் தெற்கு பிரதேச சபை
வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளராக தியாகராஜா பிரகாஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இன்று பிற்பகல் நடந்த தவிசாளர் தெரிவுக்கான அமர்வில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் பிரகாஸ், தமிழ் தேசிய பேரவை சார்பில் கருணைநாதன் அபராசுதன் ஆகியோர் முன்மொழியப்பட்டனர்.
31 பேர் கொண்ட சபையில், 14 வாக்குகளைப் பெற்று பிரகாஸ் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.
அவருக்கு ஆதரவாக தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்களும் ஈபிடிபி உறுப்பினரும் வாக்களித்தனர்.
அதேவேளை, கருணைநாதன் அபராசுதன் 12 வாக்குகளைப் பெற்றார்.
உப தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட செல்வரத்தினம் உதயகுமாரன் தெரிவு செய்யப்பட்டார்.
இந்த வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி பங்கேற்கவில்லை.