தூதுவர்கள் நியமனத்தில் திணறும் சிறிலங்கா அரசாங்கம்
சிறிலங்காஅரசாங்கம் கடந்த டிசம்பர் மாதம் 16 நாடுகளுக்கான தூதுவர்களைத் திரும்ப அழைத்த போதும், ஆண்டின் பாதிக்காலம் கடந்தும், இன்னும் 8 நாடுகளுக்கான தூதுவர்களை நியமிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீள அழைக்கப்பட்ட 16 தூதுவர்களுக்குப் பதிலாக, எட்டு நாடுகளுக்கான தூதுவர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 7 பேர் அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்டவர்கள் ஆவர்.
சிறிலங்கா வெளிவிவகாரச் சேவை அரசியல்மயமாக்கப்படக் கூடாது எனக் கூறிவந்த தேசிய மக்கள் சக்தி, தனது ஆட்சியில் அதற்கு மாறாக 7 தூதுவர்களை அரசியல் ரீதியாக நியமித்துள்ளது.
தற்போது பிரித்தானியா, ஜப்பான், தென்னாபிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கான தூதுவர்களை அரசியல் ரீதியாகவே நியமனம் செய்துள்ளது.
கியூபா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு, வெளிவிவகாரச் சேவைக்கு வெளியே இருந்து நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதைவிட முன்னாள் பிரதம நீதியரசர், ஜெயந்த ஜெயசூரிய நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
எனினும் கடந்தகால அரசாங்கங்களைப் போல, புதிய அரசாங்கம் ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் உறவினர்களை இராஜதந்திர பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கவில்லை.
அதேவேளை, ஆறு மாதங்களுக்குப் பின்னரும் 8 தூதுவர்களுக்கான நியமனங்கள் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை.
தற்போது, மலேசியா, கென்யா, ஓமான், நேபாளம், சீஷெல்ஸ், ஈரான், மற்றும் இந்தோனேசியாவில் உள்ள சிறிலங்கா தூதரகங்கள் தூதுவர்களின்றி செயல்படுகின்றன.
வெளிவிவகாரச் சேவைக்கு போதுமான இராஜதந்திரிகளைக் கண்டுபிடிப்பதில் அரசாங்கம் திணறி வருகிறது.