தடையை மீறி அமைதியாக நடந்த போராட்டம்- தெற்கில் இருந்து 30 பேரே வந்தனர்
தையிட்டியில் பொதுமக்களின் காணிகளை அபகரித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக நேற்று கடும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் போராட்டம் நடத்தப்பட்டது.
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக ஒவ்வொரு பௌர்ணமி தோறும் போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில், தென்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான சிங்களவர்களை திரட்டி வந்து, அதற்கு எதிராகப் போராட்டம் நடத்த சிங்கள ராவய, தேசப்பற்று தேசிய முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தன.
இந்த நிலையில் பலாலி காவல் நிலைய பொறுப்பதிகாரியின் கோரிக்கைப்படி மல்லாகம் நீதிமன்றம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார், சிறிதரன் உள்ளிட்ட தமிழ் அரசியல் பிரமுகர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணி உரிமையாளர்களுக்கு எதிராகவும், தென்பகுதியில் இருந்து சிங்கள மக்களை அழைத்து வரத் திட்டமிட்ட பௌத்த பிக்குகள் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கு எதிராகவும் போராட்டம் நடத்த தடை உத்தரவு பிறப்பித்த து.
இந்த நிலையில் நேற்று முன்தினமும் நேற்றும் தையிட்டி பகுதியில் 500இற்கும் மேற்பட்ட காவல்துறையினர், கலகம் அடக்கும் பிரிவினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
நீர்ப்பீரங்கி வாகனம், கலகம் அடக்கும் தடுப்புகள் என்பனவும் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்த து.
அதேவேளை, நேற்றுமுன்தினம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் வழமைபோல போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று அவர்களுடன் சிறிகாந்தா, ஐங்கரநேசன், அருந்தவபாலன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரமுகர்களும் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர்.
அதேவேளை தென்பகுதியில் இருந்து சுமார் 30 பேர் மட்டுமே நேற்று திஸ்ஸ விகாரைக்கு அழைத்து வரப்பட்டனர்.
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த நிலையில், எந்த அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை.