மன்னாரில் திட்டமிட்டபடி காற்றாலைகள் – இன்று பேரணிக்கு ஏற்பாடு
முந்தைய அரசாங்கங்களினால், இறுதி செய்யப்பட்ட காற்றாலை மின் திட்டங்களை, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செயற்படுத்தவுள்ளதாக, எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
புதிய காற்றாலை மின் நிலையங்கள் நிறுவப்படவிருந்த, மன்னார் பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா மின்சார சபையின் தம்பபன்னி காற்றாலை மின் நிலையம் மற்றும் முள்ளிகுளத்தில் 100 மெகாவாட் காற்றாலை மின் நிலையத்திற்கான முன்மொழியப்பட்ட இடங்களையும் அவர் பார்வையிட்டுள்ளார்.
ஹேலிஸ் பென்டன்ஸ் (Hayley’s Fentons) நிறுவனத்தால் 50 மெகாவாட் காற்றாலை மின் நிலையம் விரைவில் நிறுவப்படும் இடத்தையும் அமைச்சர் பார்வையிட்டார்.
அதேவேளை, காற்றாலை மின்திட்டங்கள், கனிய மண் அகழ்வு திட்டங்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கண்டித்தும் இந்த திட்டங்களுக்கு எதிராகவும் மன்னாரில் இன்று கவனயீர்ப்பு பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.