தையிட்டி விகாரைப் பகுதியில் போராட்டம் நடத்த 27 பேருக்குத் தடை
சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகில், நேற்றும் இன்றும் போராட்டம் நடத்துவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார், சிறிதரன் உள்ளிட்ட 27 பேருக்கு தடைவிதித்து, மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தையிட்டி பகுதியில் பொதுமக்களின் காணிகளை அபகரித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக, காணி உரிமையாளர்களும், அரசியல் செயற்பாட்டாளர்களும் ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் இடம்பெற்று வரும் நிலையில், நேற்று மல்லாகம் நீதிமன்றத்தில் பலாலி காவல்நிலைய பொறுப்பதிகாரியினால் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து திஸ்ஸ விகாரை பகுதியில் போராட்டம் நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறிதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன், மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த சட்டத்தரணிகள் சுகாஸ், காண்டீபன்,மற்றும் வேலன் சுவாமிகள் உள்ளிட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணி உரிமையாளர்களான சாருஜன் மற்றும் சாருஜன் சுகுமாரி உள்ளிட்டவர்களுக்கும், நீதிமன்றத்தினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ராஜாங்கன சந்திரரதன தேரர் மற்றும் நபர்கள், சிகிரிய கேகால நாரங்கமுவ விகாரையின் விகாராதிபதி, தம்ம லக்கித தேரர், சிங்கள ராவய தேசிய அமைப்பின் செயலாளர் மதுபாசன பிரபாத் ரணசிங்க, மற்றும் உறுப்பினர்கள், சட்டத்தரணி சானக அபேவிக்ரம மற்றும் தேசப்பற்று தேசிய முன்னணியின் உறுப்பினர்கள், துட்டகெமுனு படைஅமைப்பின் உறுப்பினர்கள் ஆகியோருக்கும் தையிட்டி விகாரைப் பகுதியில் போராட்டங்களில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொசன் பௌர்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான சிங்களவர்களை திரட்டி வந்து, தையிட்டியில் தமிழர்களின் காணி உரித்துப் போராட்டத்தைக் குழப்பும் முயற்சிகளில் சிங்களப் பேரினவாத அமைப்புகள் ஈடுபட்டிருந்த நிலையில் நீதிமன்றத்தின் இந்தக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.