இராணுவ மயப்படுத்தப்படும் சிறிலங்கா காவல்துறை
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், சிறிலங்கா காவல்துறையை இராணுவ மயப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.
சிறிலங்கா இராணுவத்தில் இருந்து, சட்டரீதியாக ஓய்வு பெற்ற 10 ஆயிரம் பேரை, சிறிலங்கா காவல்துறையினர் இணைத்துக் கொள்வதற்கு, பொதுப் பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
45 வயதுக்கு உட்பட்ட சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தினர் 10 ஆயிரம் பேர், சிறிலங்கா காவல்துறையினர் 5 ஆண்டுகள் பணியாற்றுவதற்காக சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.
இந்த திட்டத்தை செயற்படுத்துவதற்கு பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவினால் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில், அமைச்சரவைப் பத்திரம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
போர்க்காலத்தில் கூட, சிறிலங்காவின் எந்தவொரு அரசாங்கமும் இந்தளவு பாரிய எண்ணிக்கையான, முன்னாள் இராணுவத்தினரை, காவல்துறையில் சேர்த்துக் கொள்ளவில்லை.
இது சிறிலங்கா காவல்துறையை இராணுவ மயப்படுத்தும் நடவடிக்கையாக கருதப்படுகிறது.