மேலும்

கோத்தாவின் இரட்டைக் குடியுரிமை ஆவணங்கள் இல்லை – கைவிரித்த அரச திணைக்களங்கள்

கோத்தாபய ராஜபக்சவின் இரட்டைக் குடியுரிமை தொடர்பான பதிவுகள் எவையும் தம்மிடம் இல்லை என்று, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சும், குடிவரவு குடியகல்வு திணைக்களமும் தெரிவித்ததாக, குற்ற விசாரணைப் பிரிவு, கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கோத்தாபய ராஜபக்சவின் இரட்டைக் குடியுரிமை தொடர்பாக சிவில் சமூக செயற்பாட்டாளர்களான காமினி வியாங்கொட, சந்ரகுப்த தெனுவெர ஆகியோர் செய்த முறைப்பாடு குறித்து நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பான பி அறிக்கையிலேயே குற்ற விசாரணைத் திணைக்களம் இவ்வாறு கூறியுள்ளது.

கோத்தாபய ராஜபக்சவின் இரட்டைக் குடியுரிமை தொடர்பான ஆவணங்களை கேட்டு குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் எழுத்து மூலம் தாம் கோரியிருந்ததாகவும், அதற்கு குடிவரவுத் திணைக்களம் அனுப்பியுள்ள பதிலில், 2005ஆம் ஆண்டு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்ட காலத்தில் பாதுகாப்பு அமைச்சே அந்த விவகாரத்தை  கையாண்டது என்றும், தம்மிடம் எந்த ஆவணங்களும் இல்லை என்று கூறியுள்ளதாக  சிஐடி தெரிவித்துள்ளது.

அதேவேளை, பாதுகாப்பு அமைச்சிடம் ஆவணங்களைக் கோரி  எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில்  இரட்டை குடியுரிமை தொடர்பான விடயங்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினாலேயே கையாளப்பட்டுள்ளன என்றும், கோரப்பட்ட ஆவணங்கள் எதுவும் பாதுகாப்பு அமைச்சிடம் இல்லை என்றும் பதிலளித்துள்ளது.

இந்த நிலையில், கோத்தாபய ராஜபக்சவின் இரட்டை குடியுரிமை சான்றிதழ் தொடர்பான ஆவணங்களை குற்ற விசாரணைத் திணைக்களத்திடம் சமர்ப்பிக்குமாறு, குடிவரவுத் திணைக்கள கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கொழும்பு பிரதம நீதிவானிடம் சிஐடியினரால் கோரப்பட்டது.

இதையடுத்து, கொழும்பு பிரதம நீதிவான் லங்கா ஜெயரத்ன,  சிஐடியின் கோரிக்கையை ஏற்று குறித்த ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு குடிவரவுத் திணைக்கள கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *