மேலும்

சுதந்திரக் கட்சிக்கு சஜித் தூது – ஆதரவு பெற பேச்சுக்கு முயற்சி

வரும் அதிபர் தேர்தலில் ஆதரவைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் பேச்சு நடத்த ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச,அழைப்பு விடுத்துள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு அளிப்பதற்காக பேச்சுக்களை சிறிலங்கா சுதந்திரக் கட்சி முன்னெடுத்துள்ள நிலையில், அந்தக் கட்சியுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு சஜித் பிரேமதாச அதிகாரபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார்.

ஐதேகவின் பொதுச்செயலர் அகில விராஜ் காரியவசம் மூலமாக, சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகரவுக்கு இது குறித்து அதிகாரபூர்வமாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்கவின் அனுமதியைப் பெற்றுக் கொண்டே சஜித் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

சுதந்திரக் கட்சியின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கு அந்தக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகரவுடன் ஆரம்பக் கட்டப் பேச்சுக்களை நடத்த சஜித் பிரேமதாச திட்டமிட்டுள்ளார்.

இந்தப் பேச்சுக்கள் வெற்றியளித்தால், கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளன.

மைத்திரி- மகிந்த பேச்சு மீண்டும் தோல்வி

சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் மகிந்த ராஜபக்சவும்,  சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் நேற்று பிற்பகல், சந்தித்து கூட்டணி அமைத்துக் கொள்வது தொடர்பாக பேச்சு நடத்திய போதும், அது வெற்றியளிக்கவில்லை.

பசில் ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச ஆகியோருடன் சென்று மகிந்த ராஜபக்ச பேச்சு நடத்தியிருந்தார்.

எனினும், மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்க மகிந்த தரப்பு மறுத்து விட்டது.

மொட்டு சின்னத்தை மாற்றி பொதுச் சின்னத்தில் போட்டியிட்டால் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க சிறிலங்கா சுததந்திரக் கட்சி முடிவு செய்திருந்தது.

ஆனால் மொட்டு சின்னத்தை கைவிட மகிந்த தரப்பு மறுத்து வருவதால் மீண்டும் இழுபறி ஏற்பட்டுள்ளது.

சின்னத்தில் மாற்றங்களை செய்வதற்கு இப்போது காலம் பிந்தி விட்டது என்றும், நாடாளுமன்றத் தேர்தலில் அதனை கவனத்தில் கொள்ளலாம் என்றும் சிறிலங்கா அதிபருக்கு தாங்கள் விளக்கமளித்ததாக மகிந்த ராஜபக்ச கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *