மேலும்

நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்க முடியாது – ஞானசார தேரர்

உயிரிழந்த பிக்குவின் உடலை அடக்கம் செய்யாமல், நீதிமன்றத் தீர்ப்புக்காக காத்திருக்க முடியாது என்றும், விகாரைக்கு சொந்தமான நிலத்திலேயே பிக்குவின் உடலை எரிந்ததாகவும், பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு- பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை ஆக்கிரமித்திருந்த பௌத்த பிக்குவின் உடலை, நீதிமன்ற உத்தரவையும் மீறி, ஆலய தீர்த்தக் கேணியில் தகனம் செய்யும் நடவடிக்கையில் முன்னின்று  செயற்பட்ட ஞானசார தேரர், தமது செயலை நியாயப்படுத்தி கருத்து வெளியிட்டுள்ளார்.

“இந்து -பெளத்த மக்கள் மத்தியில்  இன முரண்பாடுகளை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கம்  எமிடம் இல்லை.

கொழும்பிலும் ஏனைய  சிங்கள பகுதிகளிலும் தமிழ் -சிங்கள மக்கள்  மத விடயங்களில் மிக ஒற்றுமையாக செயற்பட்டு வருகின்றனர்.

ஆனால், வடக்கிலும் கிழக்கிலும் மாத்திரம் அந்த நிலைமை இல்லை. அங்கு பௌத்தம் புறக்கணிக்கப்பட்டு , இனவாதம் பரப்பப்பட்டு அரசியல் தூண்டுதல்கள் மற்றும் அரசியல் சுயநலம் காரணமாக முரண்பாடுகள் ஏற்படுத்தப்படுவதை எம்மால் ஏற்றுகொள்ள முடியாது.

இந்துக்களுக்கு எவ்வாறு அங்கு எல்லா உரிமையும் உள்ளதோ அதேபோல் பௌத்தர்களுக்கும் சம உரிமை உண்டு.

அங்கு எமது தேரர் ஒருவருக்கு நெருக்கடி என்றால் எம்மால் வேடிக்கை பார்க்க முடியாது.

இந்த நாட்டில் பெளத்த- சிங்களத்துக்கு முன்னுரிமை  இருப்பதாக அரசியல் அமைப்பில் கூறப்பட்டுள்ள நிலையில், அது வடக்கு – கிழக்குக்கு பொருந்தாது என்றே அவர்கள் நினைக்கின்றனர்.

இந்த விடயத்தில் சட்டத்தை  நாடிய சட்டத்தரணிகளும் அவ்வாறான ஒரு பிரிவினைவாத நிலைப்பாட்டில் இருந்தே  வாதாடுகின்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு இவ்வாறு பிரிவினைகளை தூண்டி நாட்டில் இல்லாத பிரச்சினைகளை உருவாக்குகின்றது.

இவ்வாறான நிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பு என்னவாக இருந்தாலும் நாம் எமது உரிமைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம்.

நீராவியடி போர்க்காலத்தில் கைப்பற்றப்பட்டதாக கூறுவது தவறு. இங்கு மேதாலங்கார தேரர் நீண்டகாலமாக இருந்தார்.

வடக்கு- கிழக்கில் விகாரைகளை அமைக்கக்கூடாதா, அதனையா தமிழ் சமூகம் சார்பில் வலியுறுத்துகின்றீர்கள்?

தேரரின் உடலை ஆலயத்தில் தகனம் செய்யவில்லை. விகாரைக்குரிய இடத்திலேயே நாம் தகனம் செய்தோம்.

நீதிமன்றத்தை அவமதிக்கவும் இல்லை. தீர்ப்பு வரும் வரை உடலை வைத்திருக்க முடியாது.  எனவே தான் நாம் அவ்வாறு நடந்து கொண்டோம். இதனை இந்து- பெளத்த மோதலாக பார்க்க வேண்டாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தான் மக்களை தூண்டிவிட்டு குழப்பங்களை ஏற்படுத்தியதாக தகவல் கிடைத்தது. அனைவரும் இதனை அரசியலாக மாற்றவே முயற்சிக்கின்றனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *